ஐநாவில் 5 முறையாக உரையாற்றும் பிரதமர் மோடி!

Estimated read time 1 min read

நியூயார்க்கில் வரும் செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐநா பொதுச் சபையின் உயர்மட்டக் கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார். தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் ஆன பிறகு, ஐநா சபையில் பிரதமர் மோடி ஆற்றும் முதல் உரை இதுவாகும். அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

ஐநா பொதுச் சபையின் 79வது அமர்வின் உயர்மட்டக் கூட்டம் செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. செப்டம்பர் 24ம் தேதி ஐநா உயர்மட்ட அமர்வை வழக்கம் போல் பிரேசில் தொடங்கி வைக்கிறது.

முன்னதாக ஐநா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்கிறார்.அதைத் தொடர்ந்து பொதுச் சபையின் 79 வது அமர்வின் தலைவர் உரையாற்றுகிறார்.

தொடர்ந்து, நவம்பரில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், தனது பதவிக் காலத்தின் இறுதி உரை நிகழ்த்த இருக்கிறார்.

செப்டம்பர் 20 மற்றும் 21 தேதிகள் சபையின் நடவடிக்கை நாட்களாகவும் செப்டம்பர் 22 மற்றும் 23 ஆம் தேதிகள் உச்சிமாநாடு நடைபெறும் நாட்களாகவும் திட்டமிடப் பட்டுள்ளது. பிறகு நடக்கும் உயர்மட்ட கூட்டத்தில் ஐ.நாவின் எதிர்கால லட்சிய உச்சி மாநாடும் நடக்க இருக்கிறது.

இக் கூட்டத்தில் பிரதமர் மோடி செப்டம்பர் 26 ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு அமர்வில் உரையாற்றுவார் என்று ஐநா பேரவைத் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் அலுவலகம் வெளியிட்டுள்ள முதற்கட்டத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவில் செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி அன்று இரவு 12:30 மணி முதல் 3:30 மணி வரை பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில், உக்ரைன் மீதான இராணுவ நடவடிக்கையை ரஷ்யா மேற்கொண்ட பிறகு முதல் முறையாக கடந்த வாரம் பிரதமர் மோடி ரஷ்யாவில் நடந்த இந்தியா- ரஷ்யா உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார் . அதிபர் புதினுடனான பிரதமர் மோடியின் சந்திப்பும் , இருதரப்பு ஒப்பந்தங்களும் மேற்கத்திய நாடுகளைக் கவலைபட வைத்தன.

இந்நிலையில், பல்வேறு நாடுகளின் அதிபர்கள்,பிரதமர்கள் மற்றும் பிற மூத்த அரசியல் தலைவர்கள் கூடும் ஐநா ஆண்டுக் கூட்டத்தில் பிரதமர் மோடி ஐநாவில், உரையாற்றுவது மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

ஐந்தாவது முறையாக, ஐநா சபையில் உரையாற்றும் பிரதமர் மோடி, கடந்த 2021ம் ஆண்டு நடந்த ஐநா உயர்மட்ட கூட்ட அமர்வில் உரையாற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச அளவில் டிஜிட்டல் ஒப்பந்தம் கொண்டுவர இருக்கும் ஐநா சபை, எதிர்கால தலைமுறைகள் பற்றிய பிரகடனத்தையும் வெளியிட உள்ளது.

சிறந்த நிகழ்காலத்தை வழங்கவும், எதிர்காலத்தைப் பாதுகாக்கவும் ஒரு புதிய சர்வதேச கருத்தை ஒருமித்த குரலில் முடிவெடுக்கும் ஐநா உயர்மட்ட உச்சிமாநாட்டில் , பிரதமர் மோடியின் உரையைக் கேட்க உலகமே காத்திருக்கிறது.

ஐநாவில் இந்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார். அந்த உரை, ஐ.நா.வின் 6 அதிகாரப்பூர்வ மொழிகளில் ஒரே நேரத்தில் மொழிபெயர்த்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

Please follow and like us:

More From Author