காரல் மார்க்சு காப்பியம்

Estimated read time 1 min read

காரல் மார்க்சு காப்பியம் !
நூல்ஆசிரியர் : பாவலர் மணி ஆ. பழநி !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

தமிழினி 67, பீட்டர்ஸ் சாலை, இராயப்பேட்டை, சென்னை-14. விலை : ரூ. 60

*****

நூல் ஆசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்கள் எழுதிய பாடல்கள் கல்லூரியில் பாடமாக இருந்த போது அவற்றை மனப்பாடம் செய்து அந்தக் கவிதைகளின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது அருட்செல்வர் சங்கர சீத்தாராமன் அவர்களுக்கு. அதன் காரணமாகவே இந்த நூல் வெளிவர பண உதவிகள் செய்துள்ளார். இந்த நூலை அவருக்கு படைப்பு செய்துள்ளார். இந்த நூல் அறிமுக விழா மதுரையில் புரட்சிக்கவிஞர் மன்றத்தின் சார்பில் திரு. பி. வரதராசன் அவர்கள் நடத்தினார். அந்த விழாவில் ரூ. 50,000 நன்கொடை நூலாசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்களுக்கு அருட்செல்வர் சங்கர சீத்தாராமன் வழங்கி மகிழ்ந்தார்.

நூலில் இராசேந்திர சோழன் அவர்களின் அணிந்துரையும் மகுடேசுவரன் அவர்களின் நல்லுரையும் நன்று. காரல் மார்க்சு வாழ்க்கை வரலாற்றை காப்பியமாக வடித்துள்ளார். வரலாற்றை கவிதை நடையில் வடிப்பது எல்லோராலும் முடியாது. அவர் புலவர் பட்டம் பெற்ற காரணத்தாலும் தமிழ்மொழியில் இலக்கியத்தில் ஈடுபாடு உள்ள காரணத்தால் மிக நுட்பமாகவும், எளிமையாகவும் எல்லோருக்கும் புரியும் விதமாகவும் நன்கு வடித்துள்ளார். காரல் மார்க்சு வரலாற்றையும் நன்கு பயின்றுள்ளார். அதனால் தான் அவரால் காப்பியம் வடிக்க முடிந்துள்ளது.

மிகச்சிறந்த காரல் மார்க்சு பற்றிய பிம்பத்தை கண்முன்னே வைரவரிகளால் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்கள்.

தத்துவப் போர்க்களத்தில்

வெற்றியே தந்தான் வாழ்வைக்
கொடுத்திடும் வறுமைப் போரில் கொத்தாக மூன்று பிள்ளை
செத்தாரே! சென்னி வாழ்வை

நோய்களும் தின்னக் கண்டு
பித்தான போதும் கூடப்

பிறழாதான் வாழ்க்கை என்னே!

காரல் மார்க்சு உலகின் வறுமையை ஒழிக்க வழி சொன்ன போதும் தான் வறுமையில் வாடிய போதும் செம்மையாக வாழ்ந்தார் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார்.

காரல் மார்க்சின் தந்தை கண்ட கனவை வைர வரிகளில் செதுக்கி சராசரி தந்தையின் எதிர்பார்ப்பை அவருக்கும் இருந்தது என்பதை நன்கு புலப்படுத்தி உள்ளார். பாருங்கள்.

சட்டத்தில் தேறி விட்டான்

சரித்திரம் படைப்பான், நெஞ்சின்
திட்டத்தை எல்லாம் மைந்தன்

ஈடேற்றி வைப்பான் என்றோர்
இட்டத்தை மனத்துள் வைத்துத்

திகழ் ஆசை வானத் தின்மேல்
பட்டத்தைப் பறக்க விட்டுப்

பகற்கனாக் கண்டான் தந்தை.

கவிதைகள் எளிய நடையில் இருந்த போதும் ஒரு சில சொற்களுக்கு அய்யம் வரலாம் என்று கருதி ஒவ்வொரு பக்கத்திலும் சில சொற்களுக்கு விளக்கம் தந்து இருப்பது நூலின் தனிச்சிறப்பு. வடமொழி எழுத்துக் கலப்பின்றி எழுதி உள்ளார். இஷ்டம் என்று எழுதாமல் இட்டம் என்றே எழுதி உள்ளார். நன்கு புரியவும் செய்கின்றது.

காரல் மார்க்சு வாழ்க்கையில் பட்ட துன்பங்கள் அவரது அப்பா இறந்து விடுகிறார். வறுமைய்லி வாடுகிறார். அவரது வாழ்வில் நடந்த பல்வேறு நிகழ்வுகளை கவிதையால் வடித்து கண்முன்னே காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார்.

தத்துவத்தில் முனைவனெனும் பட்டமிருந் தென்ன
சித்திரத்தில் உள்ள பழம் எப்பசியைத் தீர்க்கும்?
எத்துறையில் எந்நெறியில் எப்பணியில் சேரல்
பத்துமுறை எண்ணி எண்ணிச் சித்தமொடிந்தானால்.

பொதுவுடைமை கருத்தை மக்கள் மனதில் பரவிடச் செய்தவர், அதில் வெற்றியும் கண்டவர், காரல் மார்க்சு என்பதை நூலில் நன்கு உணர்த்தி உள்ளார்.

சிறு தொழிலர், விவசாயி, சீர் மிகுந்த பாட்டாளி,
வெறுமுடலான் உழைப்பவர்கள், வேறுவழியற்றவர்கள்
ஒருகுழுவாத் திரளும்வணம் உருக்கொள்ள வைப்பதற்காம்
பரியசெயல் புரிவதுதான் பொதுவுடைமை யாளர்பணி.

இலண்டன் மாநகரில் காரல் மார்க்சு வாழ்ந்த காலத்தில் வந்து துன்பத்தை, துயரத்தை வார்த்தைகளால் வடித்து வியப்பில் ஆழ்த்துகின்றார். மிகவும் உணர்ந்து உள்வாங்கி எழுதி உள்ளார். நேரில் பார்த்து எழுதியது போன்ற பிரமிப்பை உருவாக்கி வெற்றி பெறுகின்றார்.

பெருநகர் இலண்டன் அல்லவா? காரல்
வறுமையும் பெரியதா வளர்ந்து
திருகிட அவனோ திகைத்தனன் ; சென்னி
தெளிவுறு பொறுமையள் எனினும்
வறுமையைப் பணத்தால் துரத்தலாம் ; பொறுமை
வறுமையைத் துரத்துமோ நாளும்
சிறுமைகள் வந்து பெருகுதல் கண்டு
செத்தனன் நாள்தோறும் காரல்.

காரல் மார்க்சு வாழ்க்கையில் வறுமையின் காரணமாக சொல்லில் வடிக்க முடியாத துன்பத்தை அனுபவித்துள்ளார். அதனால் தான் உலகில் உள்ள வறுமையை ஒழிக்க ஒரே வழி பொதுவுடைமை எனப்தை உலகிற்கு உணர்த்த முடிந்தது.

தொட்டிலிலே கிடத்தத்தான் வறுமையினால்
தோதில்லை ; சவம் எடுக்கும்
பெட்டியினை வாங்குவதற்கும் வறுமையெனைப்
பிசைகிறதே என்று காரல்
முட்டி வரும் விழி நீறை முகம் துடைத்துப்
பொருமுகையில் பிரெஞ்சு நண்பன்
சட்டெனவே இரண்டு பவுன் தந்ததனால்
பிரான்சிக்கா சவம் போயிற்று.

காரல் மார்க்சு தன்னலம் கருதாது பொதுநலம் கருதி தான் வறுமையால் பெற்ற துன்பங்கள் உலகில் இனி யாரும் வாடக் கூடாது என்று முடிவு செய்து பொதுவுடைமையை மலர்வித்து ஏழ்மையை ஒழித்து உலகில் உள்ள மனிதநேய மாண்பாளர்கள் உள்ளத்தில் எல்லாம் இன்ரு வாழும் மிகச்சிறந்த மனிதர் வாழ்க்கை வரலாற்றை எழுதி முடித்துள்ள முடிப்பு மிக அருமை.

முகங்களைத் திருப்பிக் கொண்டவர் எல்லாம்
முகவரி இழந்தவர் ஆனார்.
சுகங்களே வாழ்க்கை என்றிருந்தவர்கள்
சுழலினுட் சிக்கியே மாண்டார்.
அகங்களைக் கடந்த காரலோ உலகின்
எல்லைகள் அனைத்தையும் கடந்தும்
யுகங்களைக் கடந்தும் வாழுவான் ; வானில்
ஒளிவிடும் ஞாயிறு போலே.

உண்மை தான் சூரியனுக்கு என்றும் மறைவில்லை. காரல் மார்க்சுக்கும் என்றும் மறைவில்லை. நூல் ஆசிரியர் பாவலர் மணி ஆ. பழநி அவர்களுக்கு பாராட்டுக்கள்.

.

Please follow and like us:

You May Also Like

More From Author