தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து டிஜிபி சங்கர் ஜிவால் அனைத்து மண்டல ஐஜி களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், ரசாயன கலவை இல்லாத விநாயகர் சிலைகளை மட்டும் தான் பிரதிஷ்டை செய்ய வேண்டும். அதன் பிறகு செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட இருக்கும் நிலையில் மேடையுடன் சேர்த்து 10 அடிக்கு மேல் சிலைகளை வைக்கக் கூடாது.
இதைத்தொடர்ந்து தனிநபருக்கு சொந்தமான இடங்களில் விநாயகர் சிலை வைக்க முடிவெடுத்தால் அவர்களிடம் தடையில்லா சான்று பெறுவது அவசியம்.
இதேபோன்று பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க வேண்டும் என்றால் உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறுவது அவசியம். விநாயகர் சிலைகளை நிறுவும் அமைப்புகள் முன்கூட்டியே காவல்துறையினர் மற்றும் அதிகாரிகளிடம் அனுமதி பெறுவது கட்டாயம். சிலைகள் வைக்கப்படும் இடங்களில் ஒலிபெருக்கி நிறுவ வேண்டும் என்றால் நிச்சயம் காவல்துறையினரிடம் அனுமதி பெறுவது அவசியம். இதற்காக மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது என்பதை மின்வாரியத்திற்கு கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
மருத்துவமனை, கல்வி நிறுவனங்கள் உட்பட பிற பொது இடங்களில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக விநாயகர் சிலைகளை வைக்கக்கூடாது. சிலைகளை மினி லாரி மற்றும் டிராக்டர் மூலமாக மட்டும்தான் எடுத்துச் செல்ல வேண்டும். மாறாக மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் மாட்டு வண்டிகள் போன்றவைகளில் எடுத்துச் செல்லக்கூடாது.
சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்லும்போது பதட்டமான இடங்களில் செல்ல அனுமதிக்க கூடாது. மேலும் மற்ற வழிபாட்டு தலங்களின் முன்பாக ஊர்வலம் செல்லும் போது பட்டாசுகள் கொளுத்துவது, இசை வாத்தியங்கள் முழங்குவது போன்றவைகளை செய்யக்கூடாது போன்ற உத்தரவுகளை பிறப்பித்துள்ளார்.