தங்கம் விலை : மத்திய பட்ஜெட் தாக்கல் எதிரொலியாக தங்கம் விலை மூன்றாவது நாளாக இன்றும் சரிவடைந்துள்ளது.
சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது. அதன்படி ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது.
இந்நிலையில், மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளிக்கு இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று அறிவித்த பிறகு, தங்கத்தின் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. பட்ஜெட் நாளன்று காலை ஒரு சவரன் தங்கம் ரூ.54,480க்கு விற்பனையான நிலையில், கடந்த 3 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,040 குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (25-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,440-க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.6,430க்கும் விற்பனையாகிறது. இந்த விலை குறைவால் நடுத்தர வருவாய் உள்ள குடும்பத்தினர் சற்று ஆறுதல் அடைந்துள்ளனர்.
சென்னையில் நேற்றைய நிலவரப்படி (24-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 குறைந்து ஒரு சவரன் ரூ.51,920க்கும், கிராமுக்கு ரூ.60 குறைந்து ஒரு கிராம் ரூ.6,490க்கு விற்பனையானது. அதே போல, வெள்ளியின் விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.92-க்கும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.92,000 ஆக விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.