அமெரிக்காவைச் சேர்ந்த மாணவர்களுக்கு, கேரள அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர் ஒருவர் பாடம் நடத்துகிறார் என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான்!
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள எடப்பள்ளி அமர்தநகரைச் சேர்ந்த அஜூ ஜோசப் – ஷெபா ஆன் தம்பதியின் மகன் ரவுல் ஜான். எடப்பள்ளியில் உள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.
படிப்பில் சிறந்து விளங்கிய மாணவர் ரவுல் ஜான், எதிர்கால தொழில்நுட்பம் (ஏ.ஐ) தொடர்பான விஷயங்களில் ஆர்வமாக இருந்தார். இதன் காரணமாக மீபோட் என்ற பெயரில் ரோபோ ஒன்றை ரவுல் ஜான் தயாரித்திருக்கிறார்.
தனது வகுப்புத் தோழன் சையத் உதவியுடன், பல்வேறு மரங்களை பயன்படுத்தி, அந்த ரோபோவை உருவாக்கி இருக்கிறார். இந்த ரோபோ ஆரம்பத்தில் கம்ப்யூட்டர் கேம் போன்றே வடிவமைக்கப்பட்டிருந்தது.
ஆனால், அதன் பிறகு மாணவர் ரவுல்ஜான் பல்வேறு தொழில் நுட்பங்களை பயன்படுத்தி நாம் கேட்கும் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் அந்த ரோபோவை உருவாக்கி இருக்கிறார்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால், அந்த ரோபோ நாம் கேட்கும் கேள்வியின் தன்மைக்கு தகுந்தாற்போல் பதிலளிக்கிறது என்பதுதான். அதாவது, நாம் ஆத்திரத்துடன் கேள்வி கேட்டால் அதே தொணியில் பதிலளிக்கிறது.
அதேபோல, நாம் சாந்தமாக சந்தேகத்தின் அடிப்படையில் பணிவாக கேள்வி கேட்டால் அந்த ரோபோவும் பணிவான தொணியில் பதில் அளிக்கிறது. ரவுல் ஜானின் இந்தப் படைப்பு, அவர் தொடங்கிய யூ டியூப் சேனல் மூலம் வெளியுலகுக்குத் தெரியவந்தது.
இதையடுத்து, வெளிநாடுகளில் இருக்கும் படிப்புத் தளங்கள் கலந்துரையாடலின்போது ரவுல் ஜானின் திறமையை அங்கீகரித்திருக்கின்றன. இதைத் தொடர்ந்து, அமெரிக்க மாணவர்கள் பலரும் கூகுள் மீட் மூலம் மாணவர் ரவுல் ஜானை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.
இதன் மூலம் அமெரிக்க மாணவர்களுக்கு அவர் பாடம் நடத்தி வருகிறார். ஒவ்வொரு வகுப்பிலும் 40 மாணவர்கள் வரை பங்கேற்று ரவுல் ஜானிடம் பல்வேறு கேள்விகளை கேட்கின்றனர்.
பெரும்பாலும் 2 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்கள் ரவுல் ஜானிடம் யோசனை கேட்கிறார்கள். இரவு நேரத்தில் மாணவர் ரவுல் ஜானை அமெரிக்க மாணவர்கள் தொடர்பு கொள்கிறார்கள்.
அப்போது அவர் தூங்கி விட்டால் அவருக்கு பதிலாக அவர் தயாரித்திருக்கும் ரோபோ பதிலளிக்கிறது. மாற்றுத்திறனாளிகளுக்கான ஆளில்லா விமானம் தயாரிப்பதே தனது அடுத்த இலக்கு என்று மாணவர் ரவுல் ஜான் தெரிவித்திருக்கிறார்.