திருவள்ளூரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் சிலை திறக்கப்படும் : துணை முதல்வர் உதயநிதி..!

Estimated read time 1 min read

சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கத்தில் தமிழக கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவுக்கு தலைமை தாங்கி 396 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது வழங்கினார். 210 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளையும் வழங்கினார்.

விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:- ஆசிரியர் தின விழாவில் கடந்த ஆண்டும் கலந்து கொண்டேன். அப்போது சில கோரிக்கைகள் ஆசிரியர்கள் சார்பில் வைக்கப்பட்டது. அதில் பல கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றி உள்ளார். மீதி கோரிக்கைகளையும் அவர் நிறைவேற்றி காட்டுவார்.

திராவிட இயக்கத்துக்கும், ஆசிரியர்களுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு. பெரியார் பகுத்தறிவு, சுய மரியாதைக்கான ஆசிரியர், அதனால் தான் அவருக்கு லண்டனில் உருவப்படத்தை திறந்து வைத்து பெரியார் உலகிற்கே சொந்தமானவர் என்பதை முதலமைச்சர் காட்டி இருக்கிறார்.

கலைஞர் மாணவராக இருந்தபோதே பத்திரிகை ஆசிரியராக இருந்து அதன் பிறகும் வாழ்நாள் முழுவதும் பத்திரிகை ஆசிரியராக இருந்தவர். அந்த தலைவர்கள் வழியில் தான் முதலமைச்சர் திராவிட மாடல் வளர்வதற்கு ஆசிரியராக பணியாற்றுகிறார்.

கிராமங்களுக்கு செல்லும் போது இது தான் வாத்தியார் வீடு என அடையாளம் காட்டுவார்கள். அப்படிபட்ட வாத்தியார்களால் தான் டாக்டர்கள், என்ஜினீயர்கள், விஞ்ஞானிகள் என பலரும் உருவாக்கப்பட்டு வருகின்றனர்.

சமூக மாற்றத்தை கல்வி மூலம் தான் கொண்டு வர முடியும். ஒவ்வொரு ஆசிரியரும் ஒரு புரட்சியாளர் தான். மாணவர்களிடம் பகுத்தறிவு சிந்தனைகளை ஆசிரியர்கள் வளர்க்க வேண்டும். மாணவர்கள் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க வேண்டும்.

மாணவர் சமுதாயத்திடம் சமூக அநீதிக்கு எதிரான மனப்பான்மையை வளர்க்க வேண்டும். சமூக அநீதியை எதிர்த்து தான் தமிழக அரசு தனி கல்வி கொள்கையை கொண்டு வந்துள்ளது. இரு மொழிக்கொள்கையே போதும் என்று அறிவித்துள்ளது. ஆசிரியர்களின் உழைப்பால் தான் 75 சதவீதம் மாணவர்கள் உயர் கல்விக்கு செல்கிறார்கள். இதை 100 சதவீதமாக உயர்த்த வேண்டும். ஆசிரியர்களுக்கு ஒரு வேண்டுகோள். பள்ளிகளில் விளையாட்டு வகுப்பை கடன் வாங்கி கணிதம், அறிவியல் பாடங்களை நடத்தாதீர்கள், விளையாடும் நேரங்களில் மாணவர்களை விளையாட அனுமதியுங்கள், அது தான் அவர்களின் உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும்.

ஆசிரியர் தின விழாவில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை கூறுகிறேன். டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் சிலை அமைக்கப்படுகிறது, விரைவில் அந்த சிலையை முதலமைச்சர் திறந்து வைப்பார். இவ்வாறு அவர் பேசினார்.

Please follow and like us:

You May Also Like

More From Author