இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பற்படையை மேம்படுத்தும் தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட அணுசக்தியால் இயங்கும் நான்காவது பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலை மத்திய ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கிறார். அது பற்றி ஒரு செய்தி தொகுப்பு.
கடந்த அக்டோபர் 9ம் தேதி, பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, இரண்டு அணுசக்தியால் இயங்கும் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்குவதற்கான அனுமதியை வழங்கியது. ஏற்கெனவே, INS அரிஹந்த் மற்றும் INS அரிகாட் ஆகிய இரண்டு அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் மூன்றாவது அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் அரிதாமன் தயாரிப்பு பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. மூன்றாவது நீர்மூழ்கிக் கப்பலான INS அரிதாமன் அடுத்தாண்டு கடற்படையில் இணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது INS அரிஹந்த் நீர்மூழ்கிக் கப்பலைத் தொடங்கி வைக்கும் போது, இத்தகைய பாதுகாப்பு முன்னேற்றங்கள், இந்தியாவின் அணுசக்தி முக்கோணத்தை மேலும் ஊக்குவிப்பதாகவும், நாட்டின் பாதுகாப்பில் முக்கியப் பங்காற்றுவதாகவும் மத்திய ராணுவத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருந்தார்.
INS அரிஹந்த் மற்றும் INSஅரிகாட் ஆகிய இரண்டு அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் ஏற்கனவே ஆழ்கடல் ரோந்துப் பணியில் உள்ளன.
இந்நிலையில், கடந்த வாரம் விசாகப்பட்டினத்தில் உள்ள கப்பல் கட்டுமான மையத்தில், இந்தியாவின் நான்காவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான SSBN கடலுக்குள் செலுத்தப்பட்டது.
இந்த புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் 75 சதவீதம் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதாகும். இந்தியாவின் நான்காவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலுக்கு S-4 என்ற குறியீட்டுப் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
இந்தியாவின் முதல் அணுசக்தித் தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பலான ஐஎன்எஸ் சக்ராவுக்கு S-1 என்று பெயரிட்டதால், INS அரிஹந்த் S-2 என்றும் , INS அரிகாட் S-3 என்றும் பெயரிடப்பட்டது. எனவே, நான்காவது அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலுக்கு S-4 என பெயர் சூட்டப் பட்டுள்ளது.
INS அரிஹந்த் 750 கிலோமீட்டர் வரை செல்லக் கூடிய கே-15 அணுசக்தி ஏவுகணைகளைக் கொண்டுள்ளது. இந்த S-4 நீர்மூழ்கிக் கப்பலானது INS அரிஹந்த்தை விட பெரியதாகும்.
இந்த புதிய அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் K-4 பாலிஸ்டிக் ஏவுகணைகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அவை 3,500 கிலோமீட்டர் தூரம் வரை சென்று தாக்கக் கூடியவை ஆகும். மேலும், செங்குத்து ஏவுதல் அமைப்புகளுடன் இந்த நீர்மூழ்கிக் கப்பல் வடிவமைக்கப் பட்டுள்ளது. K-4 பாலிஸ்டிக் ஏவுகணைகள், இந்தியாவின் கடலுக்கடியில் அணுசக்தித் தடுப்புக்கான முக்கியத் தளமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய-பசிபிக் பகுதிகளில், அதன் கடற்படை திறன்களை மேம்படுத்துவதற்கும் பாதுகாப்பு ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்கும், இந்தியாவின் நான்காவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பல் ஒரு முக்கிய மைல்கல்லாகும்.
இதுவரை, அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா மற்றும் சீனா மட்டுமே வைத்துள்ளது. இந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பெற்றதோடு, முன்னணியில் உள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.