தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த 14ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் படிப்படியாக மழை தீவிரமடைய தொடங்கியுள்ளது. தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் மிக கனமழை கொட்டி தீர்த்தது.
இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக மாறியது. அதோடு தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலும் கனமழை பெய்த நிலையில் இன்றும் சில மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதேப் போன்று வருகிற 1-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.
இங்கு அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.
மேலும் இன்று கேரள கடலோரப் பகுதிகள், லட்சத்தீவு மற்றும் மாலதீவு ஆகிய பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று வீசக்கூடும் என்பதால் இன்றைய தினம் மீனவர்கள் யாரும் அப்பகுதிக்கு மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.