Web team
‘கவியமுதம்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : முனைவர் யாழ். சு. சந்திரா
பேராசிரியர், மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி, மதுரை.
அமுதும் தேனும்
ஹைக்கூ கவிஞர் பதினான்காவது நூல் கவியமுதம். ஹைக்கூவில் தொடங்கியவர் கட்டற்ற கவிதைத் தடத்தில் செய்த இந்தப் பயணமும் புதிதாகத் தான் இருக்கிறது. இந்த நூலில் எனக்குப் பிடித்த கவிதைப் பக்கங்கள் தமிழ் சார்ந்தனவே.
உறவுச் சொற்களின் பட்டியலைக் கொடுத்துத் தமிழின் சொற்களஞ்சியத்தை விவரிக்கிறார். உலக மொழியால் முன்னெடுத்துச் சொல்லப்படும் ஆங்கிலத்தின் சொல்லாட்சி வறுமையையும் ஒப்பிட்டுக் காட்டுவதில் ஒரு மொழியியல் அறிஞர் போல ரவி தென்படுகிறார்.
தமிழா நீ பேசுவது தமிழா? என்ற புகழ் பெற்ற தொடரை அடியொற்றி ஒரு நீண்ட கவிதையைத் தர முற்படும் இரவி ஈழச்சொந்தங்களை அந்தக் கவிதையில் இணைத்துப் பேசுவது நம்மையும் ஈரப்படுத்துகிறது.
வள்ளுவரில் தொடங்கி பெரியார், காமராசர், அண்ணாய, வள்ளியம்மை, மண்டேலா, வாலி, வள்ளியப்பா எனச் சான்றோர் பற்றிய கவிதைகள் எல்லாம் நடைச் சித்திரமாக அந்த நாயகர்களை நம் முன்னே நிறுத்துகின்றன.
அதென்னவோ காதல் கவிதைகளில் மட்டும் தோழர் இரவியின் எழுதுகோல் அதிகமான கவித்துவத்தைத் தருகிறது.
“உச்சி எடுத்துச் சீவ வேண்டாம் என்று
அன்று நீ வேண்டுகோள் விடுத்தாய்!
இன்று வரை உச்சி எடுப்பதில்லை
கிழித்த கோட்டைத் தாண்டுவதில்லை!
என்பதைப் போல நீ அழித்த கோட்டை நான் போடுவதே இல்லை.
என்ற கவிதையைச் சொல்லலாம்.
ஒட்டுமொத்த நூலிலும் ‘அ’ வில் தொடங்கும் அற்புதம்! என்ற தலைப்பே சிறந்த கவிதை எனலாம்.
கவிதையைப் படிக்கலாம் ; ரசிக்கலாம் ; சுவைக்கலாம் ; ரசித்ததைச் சுவைத்ததைச் சொல் என்றால்
பசியை உணரலாம், சாப்பிட்டால் நீக்கிக் கொள்ளலாம், வயிறு நிறையலாம், விருந்துண்டு மகிழலாம், பசியைச் சொல் என்றால்?
கவியமுதம் உண்டால் உணர்வில் செரிக்கலாம் ; உயிர் வளர்க்கலாம் ; உண்டு உணர்ந்ததை – செரித்ததை உரைக்கத் தெரியவில்லை. அமுதும் பருகி இமையாத் தேவர்களால் இலக்கியத்தில் நிலைக்கலாம். அமுதம் உண்டாலே ஆயுள் வளரும் என்றால் அமுதம் தந்தவர்?
ஆண்டுகள் பலவாக நூல் பெருகி இலக்கிய உலகில் இறவா புகழ் பெற்றுச் சிறக்க பிறவா யாக்கைப் பெரியோனைப் பணிந்து வாழ்த்துகிறேன்.
அன்புடன்
முனைவர் யாழ். சு. சந்திரா
—
.