தமிழ்நாடு கடற்கரையோரங்களில் வானிலை முன்னறிவிப்பை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என மத்திய சென்னை திமுக எம்.பி. தயாநிதி மாறன் மக்களவையில் கோரிக்கை வைத்துள்ளார்.
மேலும் அவர் தனது அறிக்கையில் தமிழ்நாட்டின் கடற்கரையோரங்களில் தற்போது செயல்பாட்டில் உள்ள வானிலை முன்னறிவிப்பு நிலையங்கள் எத்தனை, கன்னியாகுமரி உள்ளிட்ட தமிழ்நாடு கடற்கரையோர பகுதிகளில் கூடுதலாக வானிலை முன்னறிவிப்பு வசதிகளை அமைப்பதற்கான திட்டங்கள் மற்றும் அவை அமைப்பதற்காக நிர்ணயம் செய்திருக்கும் கால இலக்குகள், நாடு முழுவதும் புதிதாக 56 டாப்ளர் ரேடார்களை நிறுவுவதாக முன்மொழியப்பட்ட திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் சென்னை முதல் கன்னியாகுமரி வரையுள்ள கரையோரங்களில் எந்தெந்த பகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டில் வானிலை முன்னறிவிப்பு உள்கட்டமைப்பை மேம்படுத்த பட்ஜெட் ஒதுக்கீடுகள் போன்ற விவரங்கள் உள்ளடக்கிய விரிவான அறிக்கை வெளியிட வேண்டும் எனவும் அவர் கோரினார்.
எம்.பி. தயாநிதி மாறனின் கோரிக்கைக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய புவி அறிவியல் துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், வானிலை இயக்கம் இந்தியாவின் வானிலை, பருவநிலை தொடர்பான அறிவியல், ஆராய்ச்சி, சேவைகளை மிகப்பெரிய அளவில் ஊக்குவிப்பதற்கான பன்முக முயற்சியாக இருக்கும். தீவிர வானிலை நிகழ்வுகளின் தாக்கங்களைச் சமாளிப்பதற்கான ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இது உதவும். வானிலை இயக்கத்தின் முக்கிய நோக்கங்கள் சில:
- அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் வானிலையில் இருந்து உயிர்கள், சொத்துக்களை பாதுகாப்பதற்கான, திறன்களை வலுப்படுத்துதல்
- சமூக நலனுக்காக அறிவியல், தொழில்நுட்ப, தரவு அறிவியல் தொடர்பான அம்சங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல்
- பொதுமக்களுக்கு துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக தரவு ஒருங்கிணைப்பு
- புவி அமைப்பு அறிவியலில் பயிற்சி பெற்ற மனித ஆற்றல்
- முன்னறிவிப்புகள் மூலம் அனைவருக்கும் எச்சரிக்கை
இரண்டு ஆண்டுகளில் ரூ.2,000 கோடி ஒதுக்கீட்டில் மத்திய துறை திட்டமான வானிலை இயக்கம் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்ட வானிலை இயக்கத்தின் செயல்பாட்டுக் காலம் 2024-2026 வரையிலான இரண்டு ஆண்டுகளாகும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.