புதுச்சேரியில் பேருந்து கட்டண உயர்வு இன்று முதல் நடைமுறைக்கு வந்தது.
புதுச்சேரியில் கடந்த 2018ஆம் ஆண்டு அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது. அதன் பிறகு கட்டணம் உயர்த்தப்படாத நிலையில், கடந்த வாரம் பேருந்து கட்டணத்தை உயர்த்தி போக்குவரத்து துறை கூடுதல் செயலர் சிவக்குமார் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன்படி உள்ளூர் அரசு பேருந்துகளுக்கான கட்டணம் 3 ரூபாயும், தொலைதூர பேருந்து கட்டணம் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ள நிலையில், புதுச்சேரி – காரைக்கால் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகளின் கட்டணம் 125 ரூபாயில் இருந்து 135 ரூபாயும், புதுச்சேரி – சென்னை வழித்தடத்தில் செல்லும் பேருந்துக் கட்டணம் 155 ரூபாயில் இருந்து 160 ரூபாயாக வசூலிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.