தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா கட்சியின் தலைவர் விஜய் தலைமயில் நாளை நடைபெறுகிறது. தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சில முக்கிய அறிவிப்புக்களை வெளியிட உள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நாளை காலை 10 மணிக்கு பூஞ்சேரியில் உள்ள தனியார் வளாகத்தில் நடைபெறுகிறது. தமிழக வெற்றி கழகம் 120 மாவட்டமாக பிரிக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு மாவட்டத்திற்கு 15 நிர்வாகிகளுக்கு பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல பொதுக்குழு செயற்குழு உறுப்பினர்கள், அணி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் என ஒட்டுமொத்தமாக 2500ல் இருந்து 3000 நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.
10 மணிக்கு மேல் தொடங்கும் விழாவில் கட்சித் தலைவர், பொதுச்செயலாளர் மற்றும் தேர்தல் வியூக அமைப்பாளர் ஆகியோர் உரையாற்ற உள்ளனர். முக்கியமாக 2026 தேர்தல் பணிகள் மற்றும் கட்சி உட்பட்டமைப்பை மேம்படுத்தும் பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும் நாளை கட்சித் தலைவர் வெளியிடுகிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் மாற்றுக் கட்சியைச் சார்ந்த சிலர் மேடையிலேயே கட்சியில் இணைய உள்ளதாகவும் கூறப்படுகிறது.
பிரசாந்த் கிஷோர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வது உறுதியாகி உள்ள நிலையில் அவரும் மேடையில் பேச இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தவெகவிற்கு சிறப்பு ஆலோசகராக அவர் செயல்பட்டாலும் ஜன்சுராஜ் கட்சியின் தலைவர் என்ற முறையில் அவருக்கு அழைப்புவிடுக்கப்பட்டது. ஜன்சுராஜ் கட்சியின் தலைவராக தமிழக வெற்றிக் கழகத்தின் ஆண்டு விழா மேடையில் பிரசாந்த் கிஷோர் பேசவுள்ளர். இவர் மட்டும் அல்லாமல் தவெக முக்கிய நிர்வாகிகள் மேடையில் பேசுகின்றனர். காலை 7 மணிக்கு மேல் விழா நடைபெறும் வளாகத்திற்கு நிர்வாகிகள் வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர். துபாய் நிறுவனத்தை சேர்ந்த பவுன்சர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் மதியம் ஒரு மணி அளவில் சைவ விருந்தும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.