சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் செய்து ஒதுக்கீடு செய்யப்படும் தொகை பற்றிய விவரங்களை அறிவித்து வருகிறார்.
அதில் முக்கியமாக மழை வெள்ள நீரை சேமிக்க சென்னையில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, கோவளம் அருகே உப வடி நிலத்தில் 3010 ஏக்கர் பரப்பில் 1.6 டி.எம்.சி. வெள்ள நீரை சேகரிக்கும் வகையில் ரூ.360 கோடியில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கப்படும் எனவும் சென்னையின் 6வது நீர்த்தேக்கமாக இது அமையும் எனவும் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். மழை பெய்தாலே சென்னையில் அதிகமாக நீர் தேங்கிவிடுகிறது. எனவே, அதனை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது.
மேலும், அதைப்போலவே சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்ட முதல்வர் படைப்பகம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி, தாம்பரம், ஆவடி உள்ளிட்ட 30 மாநகராட்சிகளிலும் அமைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.