இலங்கை கடற்படையால் பிடித்து செல்லப்பட்ட தமிழக மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடரபாக வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய் சங்கருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் . நரேந்திர மோடி இலங்கைக்கு உறுதியளித்த திட்டங்கள் சரியான நேரத்தில் முடிக்கப்படுவதை உறுதி செய்வதன் மூலம் நமது இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது நமது அண்டை நாட்டிற்கு மிகவும் தேவையான உதவிகளை வழங்கியுள்ளார் என்றும், மேலும் பரஸ்பர மரியாதை, பகிரப்பட்ட பாரம்பரியம் மற்றும் மூலோபாய ஒத்துழைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட உறவை தொடர்ந்து வளர்த்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். இருப்பினும், இலங்கை கடற்படை ஆழ்கடலில் காட்டிய சமீபத்திய நிகழ்வுகள் மற்றும் தேவையற்ற ஆக்கிரமிப்பு கவலையளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டின் ராமநாதபுரம் மாவட்டத்தின் தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் பகுதிகளைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை நேற்று கைது செய்ததை தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.
IND-TN-11-MM-979 மற்றும் IND-TN-10-MM-2530 ஆகிய பதிவு எண்களைக் கொண்ட அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
இலங்கையின் புதிய அதிபர் அனுரகுமார திசாநாயக்க பதவியேற்றதைத் தொடர்ந்து, அக்டோபர் 2024க்குப் பிறகு இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இந்த விவகாரத்தில் தலையிட்டு இலங்கை சிறையில் வாடும் மீனவர்களை விரைவில் திருப்பி அனுப்புவதை உறுதி செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக பாஜக சார்பில் கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்துள்ளார்.
இலங்கை கடற்படையின் இந்தக் கைது நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டுவர வெளியுறவு அமைச்சகம் தலையிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம் என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.