பஞ்சாபின் மோகா மாவட்டத்தில் சிவசேனை கட்சித் தலைவர் மங்கத் ராய் (மங்கா) அடையாளம் தெரியாத மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
52 வயதான மங்கா, ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனையின் மாவட்ட தலைவராக செயல்பட்டு வந்தார். இரவு 10 மணியளவில், மளிகைப் பொருட்கள் வாங்க வீட்டை விட்டு வெளியே வந்த போது, மூன்று மர்மநபர்கள் அவரை துப்பாக்கியால் தாக்கியுள்ளனர். முதல் துப்பாக்கிச் சூட்டில் அருகிலிருந்த 12 வயது சிறுவன் காயமடைந்தான். பின்னர் தப்பிக்க முயன்ற மங்காவை குற்றவாளிகள் விரட்டிச் சென்று மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தினர். பலத்த காயமடைந்த அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோதும், அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
இந்த சம்பவத்திற்குப் பின்னணி என்ன என்பது குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கொல்லப்பட்ட மங்காவின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில், அறியப்பட்ட ஆறு நபர்களும், அடையாளம் தெரியாத சிலருக்கும் எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரது குடும்பத்தினரும் ஆதரவாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். மோகா நகரில் மங்காவின் ஆதரவாளர்கள் மற்றும் சில அமைப்புகள் ஒன்றுகூடி, காவல்துறையின் நடவடிக்கையை வலியுறுத்தி பிரதாப் சௌக்கில் போராட்டம் நடத்தினர்.
சம்பவம் குறித்து அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன. பஞ்சாப அரசு சட்டம் ஒழுங்கை கட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை என ஆம் ஆத்மி அரசு மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. எதிர்க்கட்சிகள், குறிப்பாக பாஜக, இந்த சம்பவத்தை அரசின் மீதான முற்றுகையாக பயன்படுத்தி, மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை மோசமடைந்துள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து, காவல்துறை பாதுகாப்பை அதிகரித்து, குற்றவாளிகளை விரைவாக கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.