உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் நடிகை சினேகா கலந்து கொண்டார்.
உலக மகளிர் தினத்தையொட்டி தாம்பரம் மாநகர காவல்துறை சார்பில் சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற்றது. தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மேத்தா தலைமையில் நடைபெற்ற மகளிர் தின மாரத்தான் போட்டியில் சிறப்பு விருந்தினராக நடிகை சினேகா கலந்து கொண்டார்.
மாரத்தான் போட்டியை தாம்பரம் காவல் ஆணையர் அபின் தினேஷ் மேத்தா, துணை ஆணையர் மகேஸ்வரி, நடிகை சிநேகா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். கானத்தூர் தொடங்கி முட்டுக்காடு வரை 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற மாரத்தான் போட்டியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகை சிநேகா, மகளிர் தினத்தில் மாரத்தான் நிகழ்ச்சியில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்தார். மேலும், பெண்களுக்கு ஆதரவாக ஆண்களும் மாரத்தான் போட்டியில் பங்கேற்றது நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகக் கூறினார்.