அசாமின் கவுகாத்தியில் 11,600 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்.
அசாம் மாநிலத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி அம்மாநிலத்துக்கு இன்று செல்லவுள்ளார். பிரதமர் மோடி இன்று காலை 11:30 மணியளவில், குவஹாத்தியில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில் ரூ .11,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டவுள்ளார்.
புனித தலங்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த வசதிகளை வழங்கும் முயற்சியின் மற்றொரு படியாக, மா காமாக்ய திவ்யா பரியோஜனா திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். இது வடகிழக்கு பிராந்தியத்திற்கான பிரதமரின் மேம்பாட்டு முன்முயற்சி திட்டத்தின் கீழ் கட்டமைக்கப்படுகிறது.
தெற்காசிய துணை மண்டல பொருளாதார ஒத்துழைப்பு வழித்தட இணைப்பின் ஒரு பகுதியாக 38 பாலங்கள் உட்பட 43 சாலைகள் மேம்படுத்தப்படும் ரூ.3,400 கோடி மதிப்பிலான பல்வேறு சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். டோலாபாரி முதல் ஜமுகுரி வரையிலும், பிஸ்வநாத் சாரியாலி முதல் கோஹ்பூரிலும் இரண்டு நான்கு வழிப்பாதை திட்டங்களை பிரதமர் தொடங்கி வைக்கிறார். இந்தத் திட்டங்கள் இட்டா நகருக்கான இணைப்பை மேம்படுத்தவும், இப்பகுதியின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பிராந்தியத்தின் அபரிமிதமான விளையாட்டுத் திறனைப் பயன்படுத்தும் நோக்கில், மாநிலத்தில் விளையாட்டுக் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார்.
கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கும் பிரதமர் அடிக்கல் நாட்டவுள்ளார். மேலும், கரீம்கஞ்சில் மருத்துவக் கல்லூரி வளர்ச்சி திட்டங்களுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.