திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும் – சீமான்..!

Estimated read time 1 min read

சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய இளநிலை உதவி வரைவாளர் பணிக்கான போட்டித் தேர்வில், ஐயா வைகுண்டர் குறித்த கேள்வியில் ‘முடிசூடும் பெருமாள்’ என்பதை ‘The god of hair cutting’ என்று ஆங்கிலத்தில் மிகத்தவறாக மொழிபெயர்த்து இழிவுபடுத்தியுள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. திமுக அரசு தொடர்ச்சியாகப் போற்றுதற்குரிய தமிழின முன்னோர்களையும், தமிழ்த் தலைவர்களையும் உண்மைக்குப் புறம்பான அவதூறு பொய்ப்பரப்புரைகள் மூலம் திட்டமிட்டு அவமதித்து வருவது தமிழர் வரலாற்றைத் திரிக்கும் வெளிப்படையான சூழ்ச்சியேயாகும்.
‘கோயிலுக்குள் நுழையாதே தீட்டு’ என்று தடுத்த கோட்பாட்டிற்கு எதிராக, அந்தக் கோயிலே எனக்குத் தீட்டு என்று முழங்கி, ‘கண்ணாடி முன் நின்று, உன்னை நீயே வழிபடு! நீதான் கடவுள்!’ என்று தனிவழியைத் தோற்றுவித்த உண்மையான மெய்யியல் பேரறிஞர் ஐயா வைகுண்டர். முதன் முதலாக ‘துவையல் விருந்து’ என்ற பெயரில் சமபந்தி விருந்தினைத் தொடங்கி ஒடுக்கப்பட்ட மக்களையும் ஒன்றாக அமரவைத்து உணவளித்த உண்மையான அருந்தவத் தமிழ்ப்பெரியார். பொதுக்கிணற்றில் நீர் எடுக்கக்கூடாது என்று தடுக்கப்பட்ட மக்களுக்காகத் தன்னுடைய சொந்த நிலத்தில் தனிக் கிணறு வெட்டி, அதில் அனைத்து மக்களையும் நீர் எடுக்க அனுமதித்து, அதையே பொதுக்கிணறாக்கிய உண்மையான பொதுவுடைமைவாதி. முழங்காலுக்குக் கீழ் வேட்டிக் கட்டக்கூடாது என்ற கட்டுப்பாடுகளைத் தகர்க்க, அதைத் தலையில் கட்டிக்கொள்ளச் செய்து, தலைகீழ் மாற்றத்தை நிகழ்த்திய உண்மையான சமயப்புரட்சியாளர். ‘தாழக்கிடப்பாரைத் தற்காத்து நிற்பதே தர்மம்’ என்று கற்பித்த உண்மையான பேரருளாளர் ஐயா வைகுண்டரின் பெரும்புகழை அவமதிக்கும் போக்கினை ஒருபோதும் பொறுத்துக்கொள்ள முடியாது. தமிழ்நாடு தேர்வாணையத்தின் இத்தகைய அலட்சியப்போக்குப் பொறுப்பற்றத்தனத்தின் உச்சமாகும்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பணியாற்றும் வினாத்தாள் தயாரிப்புக் குழுவில் ஆங்கிலம் அறிந்த ஒருவர்கூட இல்லையா? அத்தனை கவனக்குறைவாகவா அரசுத்தேர்வாணையம் செயற்படுகிறது? அல்லது திமுக அரசால் திட்டமிட்டு வேண்டுமென்றே இதுபோன்ற கேள்விகள் திணிக்கப்படுகிறதா? திராவிட முன்னவர்களான பெரியார், அண்ணா, திமுக தலைவர் கருணாநிதி ஆகியோர் குறித்து இதுபோன்று அலட்சியமாகத் தவறான கேள்விகளைக் கேட்க முடியுமா? அதை திமுக அரசுதான் அனுமதித்து வேடிக்கைப்பார்க்குமா? உண்மைக்குப் புறம்பான இதுபோன்ற பொய்ப்பரப்புரைகளால் பேரருளாளர் முடி சூடும் பெருமாள் ஐயா வைகுண்டரின் பெரும்புகழை ஒருபோதும் மறைத்துவிட முடியாது.
ஆகவே, தமிழ்மக்களால் தெய்வமாக வணங்கப்படும் ஐயா வைகுண்டரைத் திட்டமிட்டு இழிவுபடுத்தியதற்கு திமுக அரசு பொதுமன்னிப்பு கேட்க வேண்டும். இதுபோன்ற அவதூறான கேள்வியை உருவாக்கியவர்கள் மீது உடனடியாகக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலத்தில் அரசுத்தேர்வுகளில் இதுபோன்ற திட்டமிட்ட பொய்ப்பரப்புரைகள் இடம் பெறாமல் கவனமுடன் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
Please follow and like us:

You May Also Like

More From Author