ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள 113 கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செய்துள்ளது.
இன்று காலை 6.15 மணி முதல் 6.50 மணிக்குள் ராஜகோபுரம் கும்ப கலசங்களுக்கு மகா குடமுழுக்கு நடைபெறுகிறது. அதேநேரத்தில் மூலவர், சண்முகர், வள்ளி, தெய்வானை, பெருமாள், நடராஜர் மற்றும் அனைத்து பரிவார மூர்த்தி சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
பக்தர்கள் எவ்வித நெருக்கடியும் இன்றி விழாவைக் காணும் வகையில் கோவில் கடற்கரையில் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. கும்பாபிஷேகத்தை பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் நேரலையில் காணும் வகையில் எல்.இ.டி. திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் மீது புனிதநீர் தெளிப்பதற்காக 20 ட்ரோன்கள் தயார் நிலையில் உள்ளன.
பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஊர்களில் இருந்து திருச்செந்தூருக்கு சிறப்பு பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதற்காக திருச்செந்தூரில் 3 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. குடமுழுக்கு முடிந்தவுடன் மூலவர் மற்றும் அனைத்து சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் தொடர்பான பூஜைகள் நடைபெற உள்ளதால், நாளை பகலில் பக்தர்களுக்கு தரிசனம் இல்லை. கும்பாபிஷேகம் முடிந்து தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜையில் பக்தர்கள் தரிசனம் செய்யலாம்.கும்பாபிஷேகம் முடிந்தவுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது