இன்று தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு..!

Estimated read time 1 min read

தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 417 பொறியியல் கல்லூரிகளில் இளநிலை படிப்புகளுக்கு நடப்பாண்டில் 2 லட்சத்து 41,641 மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க தகுதிபெற்றனர். இவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த ஜூன் 27-ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று (ஜூலை 7) தொடங்குகிறது.

முதலில் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் குழந்தைகள், விளையாட்டுப் பிரிவு மாணவர்கள் ஆகியோருக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதில் அரசுப் பள்ளிகளில் படித்து 7.5 சதவீத ஒதுக்கீட்டில் விண்ணப்பித்தவர்களில் சிறப்புப் பிரிவில் வரும் மாணவர்களுக்கு கலந்தாய்வு இன்றும், நாளையும் நடத்தப்பட உள்ளது. இதில் முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகள் 9 பேரும், மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 128 பேரும், விளையாட்டு பிரிவில் 356 பேரும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஜூலை 14 முதல் பொதுப்பிரிவு: மாணவர்கள் இன்று காலை 10 முதல் மாலை 7 மணி வரை விருப்ப இடங்களை தேர்வு செய்யவேண்டும். இவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீட்டு ஆணை இரவு வெளியிடப்படும். அதற்கு மறுநாள் மாலை 5 மணிக்குள் ஒப்புதல் அளித்து மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அப்போதுதான் இறுதி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்படும். தொடர்ந்து இதர சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 9 முதல் 11-ம் தேதி வரை வரை கலந்தாய்வு நடத்தப்படும்.

அதன்பின், பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 14-ல் தொடங்கி ஆகஸ்ட் 19-ம் தேதி வரை 3 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. அந்தந்த பிரிவில் வரும் மாணவர்கள் தங்களுக்கான நாட்களில் கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை தேர்வு செய்யவேண்டும். இதற்கான விரிவான கால அட்டவணை, கலந்தாய்வில் பங்கேற்கும் வழிமுறைகள் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் https://www.tneaonline.org/ எனும் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. நடப்பு கல்வியாண்டில் பிஇ, பிடெக் ஆகிய படிப்புகளில் மொத்தம் 2 லட்சத்து 52,467 இடங்களில் மாணவர்களை சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டைவிட 20 ஆயிரம் இடங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Please follow and like us:

You May Also Like

More From Author