பாரத் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனத்திடம் ( BEL )11 சக்தி போர் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் அதனுடன் தொடா்புடைய உபகரணங்களை வாங்குவதற்கு, ரூபாய் 2 ஆயிரத்து 269 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் மத்திய பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
பாரத் எலெக்ட்ரானிக்ஸ் (BEL) நிறுவனத்துடன் 11 ‘சக்தி’ போா் தொழில்நுட்ப அமைப்புகள் மற்றும் இந்திய கடற்படைக்குத் தொடா்புடைய உபகரணங்களை உள்நாட்டு தயாரிப்பு பிரிவின் கீழ் மொத்த விலையில் வாங்குவதற்கான ரூபாய் 2,269.54 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டது.
‘சக்தி போா்முறை அமைப்புகள் மின்னணு உமிழ்வைத் துல்லியமாக இடைமறித்து, அடர்த்தியான மின்காந்த சூழலில் எதிா் நடவடிக்கைகளைச் செயல்படுத்தும் திறன் கொண்டது.
இந்தத் திட்டம் சிறு குறு தொழிற்சாலைகள் உட்பட 155-க்கும் மேற்பட்ட தொழில் கூட்டாளிகளின் பங்கேற்புடன் அடுத்த நான்கு ஆண்டுகளில், இரண்டரை லட்சம் மனித நாட்கள் வேலைவாய்ப்பை உருவாக்கும். இதன் மூலம் ‘ஆத்மநிர்பர் பாரத்’ லட்சியம் மேலும் விரிவாகும் என்று கூறப்பட்டுள்ளது.