இந்தியா – இங்கிலாந்து 5வது டெஸ்ட் நடக்கும் ஓவல் மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்ட்

Estimated read time 0 min read

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் ஐந்தாவது டெஸ்ட் போட்டி ஜூலை 31ஆம் தேதி துவங்குகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வரும் இத்தொடரில் 4 போட்டிகளில் முடிவில் 2 – 1* (5) என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் இருக்கிறது. எனவே கடைசிப் போட்டியில் வென்று ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை இங்கிலாந்து சொந்த மண்ணில் வெல்லுமா என்று அந்நாட்டு ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

மறுபுறம் சீனியர் வீரர்கள் இல்லாமலேயே கில் தலைமையில் ஓரளவு நன்றாக விளையாடும் இளம் இந்திய அணி கடைசிப் போட்டியில் வென்று தொடரை சமன் செய்யத் தயாராக உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் இந்திய நேரப்படி மதியம் 3.30 மணிக்கு துவங்குகிறது. 1845ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட இம்மைதானம் 23500 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்பட்டுள்ளது.

ஓவல் மைதானம்:

1880 முதல் இங்கு நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டிகளில் இங்கிலாந்து – இந்தியா அணிகள் மொத்தம் 14 முறை மோதியுள்ளன. அந்த 14 போட்டிகளில் இங்கிலாந்து 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்தியா 2 வெற்றிகளைப் பெற்றது. குறிப்பாக 2021இல் இங்கே கடைசியாக விளையாடிய போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா அசத்திய நிலையில் எஞ்சிய 7 போட்டிகள் டிராவில் முடிந்தன.

வெதர் ரிப்போர்ட்:

இப்போட்டி நடைபெறும் முதல் நாளில் ஓவல் மைதானத்தில் 50% மழை வாய்ப்புள்ளதாக அங்குள்ள வானிலை மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது. எஞ்சிய நாட்களிலும் வானம் மேகமூட்டத்துடன் 20% மழைக்கு வாய்ப்பிருப்பதாக தெரிய வருகிறது. எனவே இப்போட்டி லேசான மழையின் குறுக்கீடுகளை தாண்டி முடிவு கிடைக்கும் அளவுக்கு நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:

ஓவல் பிட்ச் ஆரம்பகட்ட நாட்களில் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருந்து வருகிறது. சமீபத்தில் இங்கு நடைபெற்ற கவுன்டி போட்டிகளில் கிட்டத்தட்ட 1500 ரன்கள் அடிக்கப்பட்டுள்ளன. இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 343. எனவே சூழ்நிலைக்கு தகுந்தார் போல் நங்கூரமாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் பெரிய ரன்கள் குவிக்கலாம்.

அதற்கு நிகராக வேகப்பந்து வீச்சாளர்களும் புதிய பந்தில் ஸ்விங் செய்து தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். கடைசி 2 நாட்களில் ஸ்பின்னர்கள் பயன்படுத்தப்பட்ட பிட்ச்சை பயன்படுத்தி விக்கெட்டுகளை எடுத்து வித்தியாசத்தை ஏற்படுத்துவார்கள். இங்கேயும் டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Please follow and like us:

You May Also Like

More From Author