திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவின் தந்தை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் திருமணமான இரண்டரை மாதங்களில் புதுமணப் பெண் ரிதன்யா விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டு, உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக இறப்பதற்கு முன்பு தனது தந்தைக்கு ரிதன்யா ஆடியோ அனுப்பியிருந்தார். இந்த வழக்கில் கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் திருப்பூரில் வரதட்சணை கொடுமையால் உயிரிழந்த ரிதன்யாவின் தந்தை சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்வரின் தனிப்பிரிவில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரிதன்யாவின் தந்தை, “ரிதன்யாவின் மரணம் குறித்து கோயம்புத்தூர் ஐஜியிடம் புகார் அளிக்கப்பட்டது. இருந்தபோதிலும் ஜாமினில் வெளி வரக்கூடிய வகையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஜாமினில் வெளி வராத வகையில் வழக்கு தொடர வேண்டும். இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும். இன்று மாலை 4 மணி அளவில் உள்துறை செயலாளரை சந்தித்து புகார் தெரிவிக்க இருக்கிறேன். சந்தேக மரணம் என்று மட்டுமே பதிவு செய்துள்ளனர்,குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். ரிதன்யாவுக்கு நடந்ததைப் போல வேறு எந்த பெண்ணுக்கும் நடக்கக் கூடாது. சமூக வலைதளங்களில் என் பெண்ணை தவறாக சித்தரிக்கின்றனர், என் பெண்ணைப் பற்றி யாரும் தவறாக பேசாதீர்கள். என் பெண்ணுக்காக மட்டும் இல்ல.. எல்லா பெண்களுக்காகவும் தான் நான் போராடிட்டு இருக்கேன்… இனிமே யாருக்கும் இப்படி நடக்கக் கூடாது” எனக் கூறினார்.