அகில இந்திய மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27% இட ஒதுக்கீட்டின் கீழ் 20,088 இடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
இந்திய அளவில் இதர பிற்படுத்தப்பட்ட(ஓபிசி) பிரிவினருக்கு மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27 விழுக்காடு இடஒதுக்கீடு , பெரும் சட்டப்போராட்டத்திற்கு பிறகு பெறப்பட்ட நாளாகும் இன்று (ஜூலை 29). இதனை சமூகநீதி வரலாற்றின் சாதனை மைல்கல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது எக்ஸ் தள பதிவில், “20,088 இடங்கள் = பல குடும்பங்களின் பல தலைமுறைக் கனவு! சதிக்குக் கால் முளைத்துச் சாதியாகி உழைக்கும் மக்களை ஒடுக்கினாலும், விதி வலியது – இதுதான் நம் தலையில் எழுதியது எனச் சுருண்டுவிடாமல், போராடி பெறும் உரிமைகளால் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் நமக்கான இடங்களை உறுதிசெய்கிறோம்!
சமூகநீதிக்கான இந்த அரசியலையும் – போராட்டத்தையும் நாம் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும். நம் விரல்களைக் கொண்டே நம் கண்களைக் குத்தும் வித்தையறிந்தவர்கள் செய்யும் சூழ்ச்சி அரசியலை முறியடிக்க, இந்நாளின் வரலாற்று முக்கியத்துவத்தை உரக்கச் சொல்வோம்!” என்று குறிப்பிட்டுள்ளார்.