வீரதீர சேவைக்கான சுதந்திர தின குடியரசு தலைவர் பதக்கங்கள் அறிவிப்பை வெளியிட்டது உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் தமிழ்நாடு காவல்துறையை சேர்ந்த 24 காவலர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
நாட்டின் 79வது சுதந்திர தின கொண்டாட்டம் நாளை நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் குடியரசு தலைவர் பதக்கங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி நாடு முழுவதும் உள்ள காவல்துறை, தீயணைப்பு துறை, ஊர்காவல் படை மற்றும் குடிமை பாதுகாப்பு மற்றும் சீர்திருத்தப் படைகள் என பல்வேறு பிரிவுகளின் கீழ் 1,090 பணியாளர்களுக்கு வீரதீர சேவைக்கான பதக்கங்களை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதில் 233 பேருக்கு வீரதீர பதக்கமும், 99 பேருக்கு ஜனாதிபதியின் சிறப்பு சேவைக்கான பதக்கமும், 758 பேருக்கு சிறப்பான சேவைக்கான பதக்கமும் வழங்கப்படுகிறது. இதில், தமிழகத்திற்கு மொத்தம் 24 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
அதன்படி, சிறந்த சேவைக்கான குடியரசுத் தலைவர் பதக்கங்களை தமிழ்நாட்டை சேர்ந்த மூன்று காவல்துறை அதிகாரிகள் பெறுகின்றனர். B.பாலா நாகா தேவி – ADGP , G.கார்த்திகேயன் – IG, S.லட்சுமி – IG ஆகியோர் குடியரசுத் தலைவர் விருதுகளை பெறும் நிலையில், இதேபோல் சிறப்பான சேவைக்கான பதக்கத்தை தமிழ்நாட்டை சேர்ந்த 21 காவல்துறை அதிகாரிகள் பெறுகின்றனர். இதில், 2 காவல் கண்காணிப்பாளர்கள், ஒரு துணை ஆணையர் , துணை & கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் 5 பேர், இணை ஆணையர்கள் இரண்டு பேர், 11 ஆய்வாளர் மற்றும் துணை ஆய்வாளர்கள் என மொத்தம் 21 தமிழக காவல்துறை அதிகாரிகளுக்கு சிறப்பான சேவை காண பதக்கத்தை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.