தமிழகத்தில் 2025-ம் ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) அறிவிப்பு வெளியானது. ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) இத்தேர்வை நடத்தி வருகிறது. விண்ணப்பிக்க இன்று (செப்.7) கடைசி நாளாக இருந்த நிலையில், தற்போது விண்ணப்பிக்க வேண்டிய கால அவகாசம் செப்டம்பர் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு நவம்பர் 15 மற்றும் 16-ம் தேதிகளில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இடைநிலை ஆசிரியர்கள், பி.எட் முடித்த பட்டதாரி ஆசிரியர்கள், மற்றும் இடைநிலை / பி.எட். இறுதியாண்டு பயிலும் மாணவர்கள் கூட விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் https://trb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பணியாற்ற, பதவி உயர்வு பெற, TET தேர்ச்சி கட்டாயமானதாக சென்னை உயர் நீதிமன்றம் கூறியதை உறுதி செய்து, சமீபத்தில் உச்ச நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் தேர்வில் கலந்து கொள்ள விரும்புவோர், புதிய அவகாசத்திற்குள் விண்ணப்பத்தை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும்.