வெனிசுலா, ஈரானைத் தொடர்ந்து கியூபாவை கைப்பற்ற துடிக்கும் அமெரிக்கா…!

Estimated read time 1 min read

ஈரான் மற்றும் வெனிசுலா விவகாரங்களில் அதிரடி காட்டிய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், இப்போது அண்டை நாடான கியூபா மீது தனது கவனத்தைத் திருப்பியுள்ளார். “கியூபாவை எவ்வகையிலாவது கைப்பற்றுவதை ஒரு கௌரவமாகக் கருதுகிறேன்” என அவர் கூறியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், கியூபா குறித்துப் பின்வருமாறு அதிரடியாகக் கூறினார். கியூபாவை ஏதோ ஒரு வகையில் கைப்பற்றும் கௌரவம் எனக்குக் கிடைக்கும் என நம்புகிறேன்.

அதனை விடுவிப்பதா அல்லது முழுமையாகக் கைப்பற்றுவதா என்பது குறித்து நான் என்ன நினைக்கிறேனோ அதை என்னால் செய்ய முடியும். உண்மையைச் சொல்லப்போனால், கியூபா விஷயத்தில் நான் எதை வேண்டுமானாலும் செய்வேன் என்றார்.

கியூபா மற்றும் அமெரிக்கா இடையே சுமூக உறவை ஏற்படுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து வரும் வேளையிலேயே ட்ரம்ப் இவ்வாறு பேசியுள்ளார். இதற்கிடையில், கியூபா அதிபர் மிகுவல் தியாஸ்-கனெல் பதவியில் இருந்து விலக வேண்டும் என்பதே அமெரிக்காவின் முக்கிய நோக்கம் என ‘நியூயார்க் டைம்ஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ஆனால், ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை கியூபா பாரம்பரியமாகவே எதிர்த்து வருகிறது.

ஏற்கனவே வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோவை பதவியில் இருந்து அகற்றிய அமெரிக்கா, இப்போது கியூபாவிற்கு வரும் எண்ணெய் கப்பல்களைத் தடுத்து நிறுத்தி முடக்கியுள்ளது. இதனால் கடந்த மூன்று மாதங்களாக கியூபாவிற்கு எரிபொருள் வரத்து முற்றிலும் நின்று போனது.

இதன் விளைவாக, திங்கட்கிழமை கியூபாவின் மின்சாரக் கட்டமைப்பு (Electric Grid) முற்றிலுமாகச் செயலிழந்தது. இதனால் 1 கோடி மக்கள் வசிக்கும் அந்தத் தீவு நாடு முழுவதும் மின்சாரமின்றி இருளில் மூழ்கியுள்ளது. போக்குவரத்து மற்றும் பொருளாதாரம் முடங்கியுள்ளதால் கியூபா மிக மோசமான பொருளாதார நெருக்கடியைச் சந்தித்து வருகிறது.

விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், “நாங்கள் கியூபாவுடன் பேசி வருகிறோம், ஆனால் கியூபாவிற்கு முன்னதாக ஈரானை ஒரு வழி செய்துவிடுவோம்” என்று கூறியிருந்தார். ஈரானைத் தொடர்ந்து கியூபா தான் அமெரிக்காவின் அடுத்த இலக்கு என்பதை ட்ரம்ப்பின் பேச்சுகள் உறுதிப்படுத்துகின்றன.

மேலும் 1962-ஆம் ஆண்டு ஏவுகணை நெருக்கடியின் போது கியூபா மீது படையெடுக்க மாட்டோம் என சோவியத் யூனியனிடம் அமெரிக்கா அளித்த வாக்குறுதியை ட்ரம்ப் மீறுவாரா என்ற கேள்வி இப்போது எழுந்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author