பிரதமர் நரேந்திர மோடி நேற்று மிசோரம் மற்றும் மணிப்பூர் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொண்டு, அங்கு பல்வேறு வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். அதன் பிறகு, அசாம் மாநிலத்துக்குச் சென்ற பிரதமர், அங்கு நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.
அசாம் மாநிலத்தின் கலாச்சார பெருமை மிக்க இசைப் புயலாக திகழ்ந்த பாரத ரத்னா டாக்டர் பூபேன் ஹசாரிகாவின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, தர்ரங்கில் இன்று காலை நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந்த விழா மேடையில், பிரதமர் ரூ.6,300 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதில், பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே உருவாகவுள்ள குருவா-நரேன்கி பாலம் மற்றும் கவுகாத்தி நகரத்துக்கான ரிங் ரோடு திட்டம் குறிப்பிடத்தக்கவையாகும்.
பின்னர் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:“ஆபரேஷன் சிந்தூர் வெற்றிகரமாக முடிந்த பிறகு, நான் முதன்முறையாக அசாமுக்கு வருகிறேன். காமாக்யா அன்னையின் ஆசீர்வாதத்தால் இந்த வெற்றி சாத்தியமானது. பூபேன் ஹசாரிகா போன்ற மகத்தான கலைவீரரை காங்கிரஸ் அவமதித்தது வருத்தமளிக்கிறது. கலைஞர்களுக்கு பாரத ரத்னா வழங்குவதாக காங்கிரஸ் தலைவர் கூறியிருந்தாலும், எப்போது வழங்கினர் என்று மக்களே எண்ணிப் பாருங்கள்.
நான் சிவ பக்தன். எனக்கு எதிராக நீங்கள் எத்தனை அவதூறுகளை பேசினாலும், நான் அதனை தாங்கிக் கொள்வேன். ஆனால், நாட்டின் மகத்தான மக்களை அவமதித்தால் அதைச் சகிப்பதில்லை. பூபேன் ஹசாரிகாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கியது சரியா தவறா என்பதை நீங்கள் தீர்மானிக்க வேண்டும்,” என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவதூறுகளின் விஷத்தை குடித்து நான் அதனை எடுத்து விடுவேன். அதே நேரத்தில் வேறு யாரையாவது அவமானப்படுத்தினால் அதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது என்றார்.