சீனாவில் 40 வயதுப் பெண் ஒருவர், பத்து வருடங்களாக ஒரு பாரம்பரிய சீன மருத்துவக் கிரீமை பயன்படுத்தியதால் இப்போது பெரிய சிக்கலில் மாட்டியுள்ளார். அவரது உடலில் சிவப்பு, ஊதா நிறத்தில் பாம்பு போன்ற கோடுகள் தோன்றியுள்ளன. மருத்துவரின் ஆலோசனையின்றி, இணையத்தில் விற்கப்பட்ட அந்தக் கிரீமை அவர் தொடர்ந்து பயன்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில், இந்தக் கிரீம் அரிப்பை நிறுத்தியதால், திங்டிங் என்ற அந்தப் பெண்மணி அதை நம்பி, 10 லட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்துள்ளார். ஆனால், நாளாக ஆக அவரது கால்கள் வீங்கி, வாந்தி, கைகளில் மரத்துப் போவது போன்ற பல பிரச்சனைகள் வந்துள்ளன. மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவர்கள் உடலில் முக்கியமான ஹார்மோன்கள் குறைவாக இருப்பதை கண்டுபிடித்தனர்.
தோல் மருத்துவர், இணையத்தில் விற்கப்படும் “தூய மூலிகை” கிரீம்களில், அதிக வீரியமுள்ள ஸ்டீராய்டுகள் கலக்கப்படுவதாக எச்சரித்தார். இந்தக் கிரீம்கள் தோல் வழியாக உடலுக்குள் சென்று ஹார்மோன்களைக் கெடுத்து, பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார். எனவே, மருத்துவரின் ஆலோசனையின்றி எந்தக் களிம்பையும் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
