திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று வெகு விமர்சையாக நடந்தது. சூரனை வதம் செய்த போது பக்தர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கந்தசஷ்டி விழாவிற்கு வருகை தருவார்கள். தொடர்ந்து ஆறு நாட்கள் நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் விரதம் கடைப்பிடிப்பார்கள்.
இந்த ஆண்டிற்கான கந்த சஷ்டி விழா கடந்த 22ஆம் தேதி காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து ஆறு நாட்கள் நடந்து வந்த யாகசாலை பூஜையில் சுவாமி ஜெயந்திநாதர் மற்றும் வள்ளி தெய்வானை தங்கச் சப்பரத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி மாலையில் தங்கத் தேரில் உலாவரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்காரம் இன்று கோவில் முன்புள்ள கடற்கரையில் நடந்தது. சூரசம்காரத்தை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் ஒரு மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டது. காலையில் 7 மணியளவில் ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் யாகசாலைக்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு யாகசாலை பூஜைகள் நிறைவடைந்ததும் பூர்ணாவதி நடந்தது.
அதைத் தொடர்ந்து ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு அபிஷேகங்கள் நடந்தது. அதன் பின் சிறப்பு அலங்காரத்துடன் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் தங்க கொடிமரம் முன்பு எழுந்தருளி அங்கிருந்து ஊர்வலமாக வந்த ஜெயந்திநாதர் கோவில் முன்புள்ள சண்முக விலாசம் மண்டபத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். அங்கு திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். டர்ந்து மதியம் 2 மணிக்கு மேல் சஷ்டி அபிஷேக மண்டபத்திற்கு வந்த ஜெயந்திநாதருக்கு அபிஷேகங்கள் நிறைவடைந்து அலங்கார தீபாராதனுடன் சூரசம்காரத்திற்கு எழுந்தருளினார். மாலை 4:30 மணி அளவில் கோவில் முன்புள்ள கடற்கரைக்கு பக்தர்கள் வெள்ளத்தில் ஜெயந்திநாதர் கடற்கரையில் இறங்கினார். அங்கு சூரனை வதம் புரியும் நிகழ்வு நடந்தது. முதலில் கஜமுகத்துடன் சூரபத்மன் தோன்றினான். அவன் ஆணவத்துடன் தலையை ஆட்டியபடி, ஜெயந்திநாதரை சுற்றி வந்தவுடன், வதம் செய்து தலையை கொய்தார். மீண்டும், சிங்கமுகத்துடன் வந்த சூரனை, ஜெயந்திநாதர் வதம் செய்தார். பின், சூரபத்மன் நேரிடையாக தோன்றினான். அவனையும் வதம் செய்தார். இறுதியில், சூரபத்மனை வதம் செய்து மயிலாகவும், சேவலாகவும் முருகப்பெருமான் ஆட்கொண்டார்.
அப்போது அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் அரோகரா கோஷமிட்டனர். அவர்களின் அரோகரா கோஷம் விண்ணை பிளந்தது. தைத்தொடர்ந்து சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் உள்ள சந்தோஷ மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜைகளுடன் மீண்டும் சுவாமி கோவிலுக்கு வந்தடைந்தார். நாளை இரவு மணி 11 மணிக்கு மேல் திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது.
