காங்கிரஸ் தனது கட்சியையும் அதிகாரத்தையும் ஆங்கிலேயர்களிடமிருந்து பெற்றது மட்டுமல்லாமல், அடிமை மனநிலையையும் உள்வாங்கியது எனப் பிரதமர் மோடி விமர்சித்துள்ளார்.
குஜராத் மாநிலம், கெவாடியா பகுதியில் நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் விழாவில் பேசிய பிரதமர் மோடி, சுதந்திரத்திற்கு பிறகு சர்தார் வல்லபாய் படேல் 550க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை ஒன்றிணைக்கும் சாத்தியமற்ற பணியை மேற்கொண்டதாகப் புகழாரம் சூட்டினார்.
நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் தேசிய ஒற்றுமை தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டதாகக் கூறிய அவர், நாட்டின் ஒற்றுமையைப் பலவீனப்படுத்தும் ஒவ்வொரு சிந்தனையையும் செயலையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
படேலின் மறைவுக்கு பிறகு அன்றைய ஆட்சியாளர்கள் நாட்டின் இறையாண்மையில் அக்கறை செலுத்தவில்லை எனவும் குற்றம்சாட்டினார்.
மற்ற சமஸ்தானங்களைபோலக் காஷ்மீரையும் ஒன்றிணைக்க படேல் நினைத்ததாகவும், காங்கிரஸ் செய்த தவறால் காஷ்மீரின் ஒரு பகுதி பாகிஸ்தானின் சட்டவிரோத ஆக்கிரமிப்பின் கீழ் சென்றுவிட்டதாகவும் கூறினார்.
370வது சட்டப்பிரிவை நீக்கியதால் காஷ்மீர் தேசியத்துடன் இணைந்ததாகக் கூறிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் இந்தியாவின் உண்மையான சக்தியை உணர்ந்துள்ளனர் எனத் தெரிவித்தார்.
மேலும், வந்தே மாதரத்தின் ஒரு பகுதியை மத அடிப்படையில் காங்கிரஸ் நீக்கி நாட்டின் பிரிவினைக்கு அடித்தளமிட்டதாகக் குற்றம்சாட்டிய பிரதமர் மோடி, காங்கிரஸ் அந்தப் பாவத்தைச் செய்யாவிட்டால், இன்றைய இந்தியாவின் வரைபடம் வேறு மாதிரியாக இருந்திருக்கும் எனக் கூறினார்.
 
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                             
                                            
 
             
                         
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                                                 
                







 
                                
                         
                                                 
                                                 
                                                 
                                                