வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ள ஜி-20 உச்சி மாநாட்டுக்கு அமெரிக்க அதிகாரிகள் எவரும் செல்ல மாட்டார்கள் என்று அறிவித்துள்ளார். இந்த மாநாடு ஜோஹனஸ்பர்க்கில் இரு வாரங்களில் நடைபெற உள்ளது. “மனித உரிமை மீறல்கள் தொடரும் வரை அமெரிக்கா பிரதிநிதித்துவம் செய்யாது” என்று டிரம்ப் சமூக வலைதளத்தில் பதிவிட்டார்.
மாநாட்டின் கருப்பொருள் “ஒற்றுமை, சமத்துவம், நிலைத்தன்மை” என்று இருந்தாலும், டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். அடுத்த ஆண்டு ஜி-20 மாநாடு தனது ஃப்ளோரிடா டோரல் கோல்ஃப் ரிசார்ட்டில் நடக்கும் என்று கூறி மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், டிரம்ப் தனது அறிவிப்பில், தென்னாப்பிரிக்காவில் வெள்ளை இன ஆப்பிரிக்கர்கள் (அஃப்ரிகானர்கள்) கொல்லப்படுவதாகவும், அவர்களது நிலங்கள் சட்டவிரோதமாக பறிக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டினார்.
இது “பெரிய அளவில் வெள்ளை இனப்படுகொலை” நடப்பதாகவும் அவர் முன்பு கூறிய அதே பழைய குற்றச்சாட்டு. இதை அவரது முன்னாள் நண்பரான எலான் மஸ்க் (தென்னாப்பிரிக்காவில் பிறந்தவர்) அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று தென்னாப்பிரிக்க அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. தென்னாப்பிரிக்காவில் குற்ற விகிதம் உயர்ந்துள்ளது உண்மைதான், ஆனால் இன அடிப்படையில் குற்றப் புள்ளிவிபரங்கள் வெளியிடப்படுவதில்லை. அதிபர் சிரில் ராமபோசா மே மாதம் டிரம்ப்பைச் சந்தித்தபோது, வெள்ளை விவசாயிகள் அதிகம் பாதிக்கப்படவில்லை என்று தெளிவாகக் கூறினார்.
மேலும், பிப்ரவரியில் தென்னாப்பிரிக்க நீதிமன்றமும் “வெள்ளை இனப்படுகொலை” குற்றச்சாட்டு “கற்பனையானது, உண்மையல்ல” என்று தீர்ப்பளித்தது.தென்னாப்பிரிக்கா இந்த ஆண்டு ஒரு சட்டம் இயற்றியது. அரிய சூழல்களில் நிலத்தை இழப்பீடு இன்றி அரசு கையகப்படுத்த அனுமதிக்கும் இச்சட்டம், அபார்தீட் காலத்தில் கறுப்பின மக்கள் நில உரிமை மறுக்கப்பட்டதை சரிசெய்யும் நோக்கில் கொண்டுவரப்பட்டது. தென்னாப்பிரிக்காவில் மக்கள் தொகையில் 7 சதவீதம் மட்டுமே வெள்ளையினர், ஆனால் 2017 நில ஆய்வின்படி அவர்களே 75 சதவீத விவசாய நிலங்களை வைத்துள்ளனர். இதை சமன்படுத்தவே இச்சட்டம்.
அதே சமயம், டிரம்ப் இந்த நிலச் சட்டத்தை விமர்சித்து பிப்ரவரியில் தென்னாப்பிரிக்காவுக்கு அமெரிக்க உதவிகளை நிறுத்தினார். தற்போது வெள்ளை தென்னாப்பிரிக்கர்களை அகதிகளாக ஏற்றுக்கொள்ளும் திட்டத்தை விரைவுபடுத்தியுள்ளது அமெரிக்கா. ஆண்டுக்கு 7,500 அகதிகள் ஏற்கும் இடத்தில் 7,000 இடங்களை வெள்ளை தென்னாப்பிரிக்கர்களுக்கு ஒதுக்க திட்டமிட்டுள்ளது. தென்னாப்பிரிக்க வெளியுறவு அமைச்சகம் டிரம்ப்பின் பதிவை “வருத்தமளிக்கும்” என்று கூறி, அஃப்ரிகானர்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறுவது உண்மைக்கு புறம்பானது என்று மறுத்துள்ளது.
