பீகார் : சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்வது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது. 243 தொகுதிகளைக் கொண்ட இத்தேர்தலில், வாக்கு எண்ணிக்கை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே NDA 187 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. கடந்த 2020 தேர்தலில் 125 இடங்களில் வென்ற NDA, இம்முறை 62 இடங்கள் கூடுதலாகப் பெறும் வாய்ப்பில் உள்ளது.
பாஜக மற்றும் நிதீஷ் குமாரின் ஜனதா தள ஐக்கியம் (JDU) ஆகியவை கூட்டணியின் முதுகெலும்பாகச் செயல்பட்டு, எதிர்க்கட்சி மகா கட்பந்தன் (MGB) கூட்டணியை பின்னுக்குத் தள்ளியுள்ளன.பாட்னாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பாஜக இம்முறை 101 தொகுதிகளில் போட்டியிட்டு, 86 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
கடந்த தேர்தலில் 74 இடங்களில் போட்டியிட்டு 74-ஐயும் வென்ற பாஜக, தற்போது 12 இடங்கள் கூடுதலாக முன்னிலையில் உள்ளது. மோடி அலையும், மத்திய அரசின் திட்டங்களும் பீகார் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகக் கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். பாட்னாவில் உள்ள JDU அலுவலகத்தில் தொண்டர்கள் இனிப்புகள் வழங்கி, நிதீஷ் குமாருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டாடினர்.
மேலும், இது நிதீஷ் குமாரை மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்பதை உறுதிப்படுத்துகிறது. எதிர்க்கட்சி மகா கட்பந்தன் (MGB) கூட்டணி பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), காங்கிரஸ், இடதுசாரிகள் அடங்கிய இக்கூட்டணி 50-க்கும் குறைவான இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, RJD தலைவர் தேஜஸ்வி யாதவ் ராகோபூர் தொகுதியில் பாஜக வேட்பாளரிடம் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இது MGB-வின் மொத்த உத்தியையும் பாதித்துள்ளது.
