5 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட உலகின் மிகப் பெரிய மின்சார உற்பத்தி செய்யும் பட்டத்தின் முதலாவது பறத்தல் சோதனையை சீனா வெற்றிகரமாக நிறைவேற்றியது.
உள்மங்கோலிய தன்னாட்சிப் பிரதேசத்தில் நடத்தப்பட்டஇச்சோதனை, சீனாவின் அதிக-உயரத்திலான காற்றாற்றல் மின்சார உற்பத்தியில் ஏற்பட்ட முக்கிய மைல்கல் சாதனையைக் குறிக்கிறது என்று இப்பட்டத்தை உருவாக்கிய சீன ஆற்றல் பொறியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சோதனையில், தரையை அடிப்படையாக கொண்டு அதிக உயரத்தில் காற்று ஆற்றல் மூலம் மின்சார உற்பத்தி அமைப்பு சோதிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பானது, பட்டங்களைப் பயன்படுத்தி காற்று ஆற்றலை பிடித்து, தரையில் உள்ள மின்னாக்கிகள் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடியது.
இத்தகைய தொழில்நுட்பத்தில், 300 மீட்டருக்கும் மேலான உயரத்தில் காற்று ஆற்றலைப் பெற்று, பட்டங்களை மைய உபகரணமாகப் பயன்படுத்தி, மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.
பட்டத்தின் திறப்பு சோதனையின் தலைமை இயக்குநர் Cao Lun கூறுகையில், உலகின் மிகப் பெரிய ஆற்றல் உற்பத்தி செய்யும் பட்டத்தின் சோதனையை நிறைவேற்றி, வெற்றிகரமாக தரவுகளைச் சேகரித்துள்ளோம். இச்சோதனை, பட்டத்தின் வடிவமைப்புக்கான ஓர் அறிவியல்பூர்வமான அடிப்படையை வழங்கியுள்ளதுடன் முழுமையான உபகரணத்தை நிறுவுவதற்கும் தரத்தை நிர்ணயம் செய்வதற்கும் அடித்தளத்தை உருவாக்கும் என்று தெரிவித்தார்.
