பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசு பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு மாதந்தோறும் சிறார் திரைப்படம் திரையிடப்படும் திட்டத்தின் கீழ், இம்மாதம் ‘காக்கா முட்டை’ தமிழ் திரைப்படம் திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் எம். மணிகண்டன் இயக்கத்தில் 2014-ல் வெளிவந்த இந்த படம் சென்னையின் குடிசைப்பகுதியில் வசிக்கும் இரு சிறுவர்களின் வாழ்க்கைப் போராட்டங்களை எடுத்துரைப்பதால், மாணவர்களுக்கு பொருத்தமானதும் பயனுள்ளதுமானதாக கல்வித் துறை தெரிவித்துள்ளது. படத்தை ஒளிபரப்புவதற்கான அதிகாரப்பூர்வ இணைய இணைப்பு (லிங்க்) ஏற்கெனவே அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
படம் திரையிடப்படுவதற்கான நேரம் ஒதுக்கப்பட்ட பாடவேளைகளில் மேற்கொள்ளப்பட வேண்டும். இதை கண்காணித்து ஒழுங்குபடுத்த ஒவ்வொரு பள்ளியிலும் பொறுப்பாசிரியரை நியமிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொறுப்பாசிரியர், மாணவர்களுக்கு திரையிடுவதற்கு முன் படத்தை முழுமையாக பார்த்து, அதற்கான கதைச் சுருக்கத்தையும் படித்து, மாணவர்களுக்கு படத்தின் அடிப்படை கரு மற்றும் பின்னணியை முன்னதாகவே விளக்க வேண்டும்.
“வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்றி திரைப்படத்தை திரையிட வேண்டும்” என சுற்றறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், மாநில அளவில் நடைபெறும் சிறார் திரைப்பட விழாவில் சிறந்து விளங்கும் 25 மாணவர்கள் வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான கூடுதல் அறிவுறுத்தல்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் பள்ளி தலைமையாசிரியர்களுக்கு வழங்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
