சென்னை : 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் தமிழக அரசியல் களம் தீவிரமடைந்துள்ளது. அதிமுக-பாஜக கூட்டணி தனது வலிமையை வலுப்படுத்தி வருகிறது. திமுக, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்கும் நோக்கத்தில், நலத்திட்டங்களை மக்களிடம் விளக்கி வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) புதிய சக்தியாக உருவெடுத்துள்ளது. இந்தக் கட்சியில் பிரபல மேடைப் பேச்சாளரும் அரசியல்வாதியுமான நாஞ்சில் சம்பத் இணைந்தது, அரசியல் வரலாற்றில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது. இது தவெகவின் பிரச்சார வலிமையை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாஞ்சில் சம்பத், தமிழக அரசியலில் தீவிரமான பேச்சாளராக அறியப்படுபவர். மதிமுகவிலிருந்து விலகி, ஜெயலலிதா காலத்தில் அதிமுகவில் இணைந்து பேச்சுகளால் புகழ் பெற்றவர். அவரது உரைகள், சமூக நீதி, அரசியல் ஊழல், மக்கள் உரிமைகள் என்பவற்றை மையமாகக் கொண்டவை. பிறகு திமுகவில் இணைந்து ஆதரவாக பேசி வந்த இவர், விஜய்யின் தவெகவில் இணைவது கூட்டணி அல்லது தனிப்பட்ட ஈர்ப்பின் விளைவாக இருக்கலாம்.
சம்பத், தவெகவின் கொள்கைகளான சமூக நீதி, மக்கள் நலன் ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது என்கிறார். இது தவெகவின் பேச்சு அணியை வலுப்படுத்தும் முக்கிய அம்சமாகக் கருதப்படுகிறது. டிசம்பர் 5 அன்று, சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் விஜய் முன்னிலையில் சம்பத் அதிகாரப்பூர்வமாக தவெகவில் இணைந்தார். இந்தச் சந்திப்பு, கட்சியின் உறுப்பினர் சேர்க்கை இயக்கத்தின் ஒரு பகுதியாக நடைபெற்றது.
கட்சியில் இணைந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாஞ்சில் சம்பத்” 6 ஆண்டுகளாக எந்த அரசியல் கட்சியிலும் இணைத்துக் கொள்ளாமல் இருந்தேன். பெரியார், அண்ணா இலட்சியங்களை பேசி வந்த நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன் நாடு முழுவதும் பரப்புரை செய்ய விஜய் எனக்கு அனுமதி தந்துள்ளார். என்னைப் பார்த்ததும், “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார். நான் மெய்சிலிர்த்து போனேன்” என தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, அறிவாலயத்தில் இருந்து வசை சொற்களால் வசைபாடினார்கள். இதனால் மனமுடைந்துபோனேன். திமுகவின் அறிவுத் திருவிழாவில் திட்டமிட்டு என்னை நிராகரித்தனர் எந்த பரிந்துரைக்கும் திமுகவினர் முன் நான் சென்று நிற்பதில்லை; கேட்டால் சைக்கிள்கூட தரமாட்டார்கள். கடந்த கால காயங்களில் இருந்து விடுபட்டவனாக உணர்கிறேன் உற்சாக மனநிலையில் உள்ளேன் எனவும் நாஞ்சில் சம்பத் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
