சென்னை : திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான சர்ச்சையில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீது மதுரை உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை நடைபெறவுள்ளது. நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு முன் வழக்கு விசாரிக்கப்பட்டவுள்ளது.
ஏற்கனவே, கடந்த டிசம்பர் 13-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது அரசு தரப்பு வாதங்களை முன்வைத்து, தனி நீதிபதியின் உத்தரவில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியது.அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், “பல நூறு ஆண்டுகளாக உச்சிப்பிள்ளையார் கோவில் மண்டபத்திலேயே தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. தர்கா அருகில் உள்ள தூணில் தீபம் ஏற்றியதற்கான எந்த ஆதாரமும் மனுதாரர்கள் தாக்கல் செய்யவில்லை. தனி நீதிபதி ஆவணங்கள் இல்லாமல் உத்தரவிட்டார்” என்று வாதிட்டார்.
கோவில் நிர்வாகத்தின் பதிலை கருத்தில் கொள்ளவில்லை என்றும், ராமஜென்மபூமி வழக்கை தவறாக மேற்கோள் காட்டியதாகவும் குற்றம் சாட்டினார்.நீதிபதிகள், “தீபம் அனைவருக்கும் தெரிய வேண்டும் என்ற கோரிக்கை இருந்தால் அதை ஏன் செய்யக் கூடாது?” என்று கேள்வி எழுப்பினர். அரசு தரப்பு, “மனுதாரர்கள் உரிமையியல் நீதிமன்றத்தை அணுகி உத்தரவு பெறலாம். பொது அமைதி, பாதுகாப்பு கருத்தில் கொள்ள வேண்டும்” என்று பதிலளித்தது.
“மிக முக்கியமான விவகாரத்தில் 3 நாட்களில் எப்படி முடிவு எடுக்க முடியும்?” என்றும் வலியுறுத்தியது.விசாரணை முடிவடையவில்லை, அடுத்த தேதி குறிப்பிடப்படவில்லை. இந்த வழக்கு மதச்சார்பின்மை, பாரம்பரிய உரிமைகள், நீதிமன்ற உத்தரவு அமல் ஆகியவற்றை மையப்படுத்திய பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரசு தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக் கோரியுள்ளது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது இன்று நடைபெறவுள்ள விசாரணையில் தான் தெரிய வரும்.
