ஈரோடு மாவட்டத்தில் நாளை மறுநாள் (டிசம்பர் 18) தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ள நிலையில், அதில் கலந்துகொள்ளும் கழக நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தவெக தலைமை வெளியிட்டுள்ளது.
நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ள இந்த மக்கள் சந்திப்பு, காவல் துறையின் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி அமைதியாகவும், ஒழுங்குமுறையுடனும் நடைபெற அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கழகத் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.
இதில், நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு ‘பாக்ஸ்’ பகுதிகளிலும், காவல் துறை அனுமதித்துள்ள எண்ணிக்கையிலேயே பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களால் கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருப்போர், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கேற்க அனுமதி இல்லை. அவர்கள் வீடுகளில் இருந்து நேரலையில் நிகழ்ச்சியை பார்வையிடுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், தலைவர் விஜய் வருகை மற்றும் புறப்பாட்டின்போது அவரது வாகனத்தை இருசக்கர அல்லது பிற வாகனங்களில் பின்தொடரக் கூடாது என்றும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் எந்தச் செயலிலும் ஈடுபடக் கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பட்டாசு வெடித்தல் உள்ளிட்ட அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
வாகனங்கள் காவல் துறை அனுமதித்துள்ள இடங்களில் மட்டுமே நிறுத்தப்பட வேண்டும் என்றும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் எங்கும் வாகனங்களை நிறுத்தக்கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளிலும், வருகை–புறப்பாட்டு வழிகளிலும் சட்டம் ஒழுங்கை பேணும் வகையில் அனைவரும் கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
தன்னார்வலர்கள் அடையாளம் காணும் வகையில் சீருடை அணிந்து பணியாற்ற வேண்டும் என்றும், உயர்நீதிமன்ற உத்தரவுகளின்படி தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளின் இருபுறங்களிலும் அனுமதியின்றி பிளக்ஸ் பேனர், கொடி கம்பங்கள், அலங்கார வளைவுகள் அமைக்கக் கூடாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேபோல், அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், சுவர்கள், மரங்கள், வாகனங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள், சிலைகள் மற்றும் பாதுகாப்பு தடுப்புகள் ஆகியவற்றின் மீது ஏறுவதையோ, அருகில் செல்வதையோ தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் நேரத்தில் ஆம்புலன்ஸ் சேவை, பள்ளி மாணவர்கள், பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் ஆகியோருக்கு எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அனைவரும் அமைதியான முறையில் கலைந்து செல்ல வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள் அனைத்தும் கழகத் தலைவர் விஜயின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு கழகத் தோழர்களும் பொதுமக்களும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தவெக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.
