இயக்குநர் மோகன் ஜி இயக்கத்தில் ரிச்சர்ட் ரிஷி நடித்துள்ள ‘திரௌபதி 2’ திரைப்படம் வரும் ஜனவரி 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சரித்திரப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த பா.ஜ.க மூத்த தலைவர் எச்.ராஜா, படம் குறித்துப் பாராட்டிப் பேசியுள்ளார்.
தமிழகத்தின் வரலாற்றில் மறைக்கப்பட்ட உண்மைகளை இந்தப் படம் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக, 1300-களில் சுல்தான்களின் ஆட்சிக் காலத்தில் இந்துக்கள் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் மத ரீதியான ஆக்கிரமிப்புகள் குறித்து இந்தப் படம் விரிவாகப் பேசுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் படத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தும் வரலாற்று உண்மைகள் என்றும், நம் முன்னோர்கள் எவ்வாறெல்லாம் வஞ்சிக்கப்பட்டார்கள் என்பதை இன்றைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டும் என்றும் எச்.ராஜா கூறினார்.
மேலும், தமிழகத்தில் உள்ள பள்ளிக் குழந்தைகளுக்கு இந்தப் பாடமாக வைக்கப்பட வேண்டிய ஒரு கருத்தைக் கொண்டுள்ளதாக அவர் புகழ்ந்துள்ளார். குடும்பங்கள் அனைவரும் திரையரங்குகளுக்குச் சென்று இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஜிப்ரான் இசையமைத்துள்ள இந்தப் படத்தில் நட்டி மற்றும் வேலராமமூர்த்தி உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.
