தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தார்.
பூஞ்சேரியில் உள்ள ஒரு தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு முன்னதாக விஜய் இன்று காலை முதலே நோன்பு கடைப்பிடித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத நல்லிணக்கத்தைப் பேணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பெரியோர்களும் கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
ரமலான் மாதத்தின் புனிதத்தைப் போற்றும் விதமாகத் தலையில் தொப்பி அணிந்து எளிமையான முறையில் இஸ்லாமியச் சொந்தங்களுடன் அமர்ந்து விஜய் நோன்பு திறந்தார்.
இந்தச் சிறப்பு வாய்ந்த நிகழ்வின் போது அங்கிருந்தவர்களுடன் உரையாடிய விஜய் அனைவருக்கும் தனது ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். விழாவிற்கு வருகை தந்தவர்களுக்குத் தேவையான வசதிகள் மற்றும் உணவு ஏற்பாடுகள் மிகச் சிறப்பான முறையில் செய்யப்பட்டிருந்தன.
பாதுகாப்பு காரணங்களுக்காக அழைப்பிதழ் மற்றும் சிறப்பு அனுமதி சீட்டு வைத்திருந்தவர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடைபெற்ற இடத்திற்குள் அனுமதிக்கப்பட்டனர். அரசியலில் தடம் பதித்துள்ள விஜய் இது போன்ற மத நல்லிணக்க விழாக்களில் நேரில் பங்கேற்பது அவரது அரசியல் பயணத்தில் ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
