கர்நாடகா : மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் ஹிரியூர் அருகே இன்று (டிசம்பர் 25, 2025) அதிகாலை 3 மணியளவில் பயங்கர சாலை விபத்து நிகழ்ந்துள்ளது. தனியார் பேருந்து ஒன்று எதிரே வந்த லாரி மீது மோதியதில் பேருந்து தீப்பற்றி எரிந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.விபத்து நிகழ்ந்ததும் அப்பகுதி மக்கள் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீஸார் மற்றும் தீயணைப்புப் படையினர் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
தீப்பற்றியதாலேயே அதிக உயிரிழப்பு ஏற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். முதற்கட்ட விசாரணையில் லாரி ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்கு முக்கிய காரணம் என்று தெரியவந்துள்ளது. விபத்து தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.இந்த சோக சம்பவத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சிறிதளவு ஆறுதல் அளித்துள்ளது.
இந்த விபத்து கர்நாடகா மாநிலத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் பயணித்த பெரும்பாலானோர் தொழிலாளர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பயணித்தவர்கள் என்று தெரிகிறது. விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து சாலை பாதுகாப்பு குறித்து மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
