இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரானது எதிர்வரும் ஜூன் 20-ஆம் தேதி இங்கிலாந்து மண்ணில் துவங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியை கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ அதிகாரவபூர்வமாக அறிவித்தது. அதன்படி பிசிசிஐ வெளியிட்டிருந்த அறிவிப்பில் சுப்மன் கில் தலைமையில் 18 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்த வீரர்கள் அனைவரும் அடுத்த மாத துவக்கத்தில் இங்கிலாந்து சென்றடைந்து பயிற்சி மேற்கொள்வார்கள் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக இந்திய ஏ அணி அங்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி போட்டியில் விளையாட இருக்கிறது.
இந்நிலையில் எதிர்வரும் இந்த இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை எந்த சேனலில் பார்க்கலாம்? மொபைல் போன்களில் எந்த ஆப்பின் மூலம் கண்டுகளிக்கலாம்? என்பது போன்ற ஒளிபரப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.
அந்த வகையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இந்த டெஸ்ட் தொடரை சோனி குழும தொலைக்காட்சிகளில் கண்டு களிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. ஏனெனில் எதிர்வரும் இந்த தொடரை ஒளிபரப்பும் உரிமத்தை அவர்களே பெற்றுள்ளதால் தொலைக்காட்சியில் இந்த தொடரை காண விரும்புவோர் சோனி நெட்வொர்க் தொலைக்காட்சிகளில் பார்க்கலாம்.
அதேபோன்று மொபைல் போன்களில் மூலமும் இணையத்தின் வாயிலாகவும் இந்த தொடரை காண விரும்புவோர் ஜியோ ஹாட்ஸ்டார் ஆப்பிலும் இந்த தொடரை கண்டுகளிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பொதுவாகவே வெளிநாட்டில் நடக்கும் தொடர்களை எந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்புகிறதோ அதே நிறுவனத்தில் ஆப்களில்தான் இந்தியாவில் பார்க்க முடியும். ஆனால் தற்போது முதல் முறையாக ஜியோ ஹாட்ஸ்டார் இங்கிலாந்தில் நடைபெறும் அந்த தொடரையும் இந்தியாவில் ஒளிபரப்ப இருப்பது அவர்களின் அடுத்த கட்ட நகர்வாக பார்க்கப்படுகிறது.