சென்னை : நடிகர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீட்டை நெருங்கிய சூழலில், படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படாததால் ஒரு முக்கிய சட்டநடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனம், சிபிஎஃப்சி (CBFC) தணிக்கைக் குழுவின் செயல்முறையில் தாமதம் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, அவசர மனுவுடன் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடியுள்ளது. இப்படம் வெளியாவதற்கு மிகக் குறைந்த காலமே உள்ள நிலையில் ஏற்படும் இந்த தாமதம், வெளியீட்டு திட்டத்தையே பாதிக்கும் சூழல் உருவாக்கியுள்ளது.
தயாரிப்பு நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், பல்வேறு சுற்றுப்பயணங்கள், விளம்பர செலவுகள், திரையரங்கு ஒத்துழைப்புகள் என அனைத்து விஷயங்களும் ஏற்கெனவே உறுதி செய்யப்பட்ட நிலையில், தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் படத்தின் வெளியீட்டு தேதி ஆபத்தில் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தணிக்கை குழு படத்தை பரிசீலிக்க நேரம் ஒதுக்கவில்லை என்பதும், உடனடியாக விசாரணை நடத்தி வழக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியமுண்டு என்பதையும் மனுவில் வலியுறுத்தியுள்ளது.
இந்த மனுவை பரிசீலித்த சென்னை உயர்நீதிமன்றம், சூழ்நிலை அவசரம் என்பதை உணர்ந்து, மனுவை இன்று மதியம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. வழக்கை சீக்கிரம் விசாரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது, தயாரிப்பு தரப்புக்கு தற்காலிக நிம்மதியை அளித்திருப்பதாக சொல்லலாம். படத்தின் வெளியீட்டுக்கு குறைந்த நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், எந்த தடங்கலும் ஏற்படாமல் இருக்க இந்த முடிவு முக்கியமானதாக கருதப்படுகிறது.
இப்போது தணிக்கை குழு படத்தை விரைவாக பரிசீலிக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளதால், ‘ஜனநாயகன்’ தனது திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாவது குறித்து ரசிகர்கள் நம்பிக்கையுடன் உள்ளனர்.
