Web team
சுவரெழுத்து !
நூல் ஆசிரியர் : கவியருவி கு.ந. கவின்முருகு !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
மின் அஞ்சல் eraeravik@gmail.com
இணையம் www.kavimalar.com
பூவரசு பதிப்பகம், 63, முதல் மாடி, முதல் முக்கிய வீதி, அண்ணா நகர் கிழக்கு, சென்னை-102.
பக்கம் : 120, விலை : ரூ. 200. பேச : 044 23723182
******
‘சுவரெழுத்து’ என்ற பெயரைப் படித்தவுடன் மதுரையில் தானியில் (ஆட்டோவில்) எழுதி இருக்கும் கவிதைகள் நினைவிற்கு வந்தன. நூலாசிரியர் கவிதைகள் நினைவிற்கு வந்தன. நூலாசிரியர் கவியருவி கு.நா.கவின்முருகு அவர்கள் மரபுக்கவிதைகளை அருவியாகக் கொட்டி உள்ளார். குற்றால அருவியில் நனைந்தது போன்று கவிதை அருவியில் மூழ்கிட வைத்துள்ளார். மனம் உருகி, உருகி கவிதைகள் வடித்துள்ளார், பாராட்டுக்கள்.
மரபுக் கவிதை என்பது நிலவு போன்றது. புதுக்கவிதை என்பது நட்சத்திரங்கள் போன்றவை. நிலவை எத்தனை முறை வேண்டுமானாலும் ரசிக்கலாம், சலிக்காது, மனம் லயிக்கும், அதுபோலவே மரபுக்கவிதைகளை திரும்பத் திரும்ப படித்து மகிழலாம். சந்த நயமும், சொல்லாட்சியும், இலக்கண எழுச்சியும் மரபுக் கவிதைகளுக்கு மறக்க முடியாத நிலையான தன்மையைத் தந்து விடுகின்றன. நூல் முழுவதும் மரபுக் கவிதை விருந்து வைத்துள்ளார். படிக்கப் படிக்க பரவசம், கவிதைகள் யாவும் பழரசம்.
பல்வேறு தலைப்புகளில் மரபு மாறாமல் கவிதைகள் வடித்துள்ளார். மரபு இலக்கணமும், நல்ல கருத்துக்களும் இருவிழியாகக் கொண்டு கவிதைகள் வடித்துள்ளார். தமிழின் நிலைத்த தன்மைக்குச் சான்றாக விளங்குபவை மரபுக்கவிதைகள் தான். சுவரெழுத்து என்ற மரபுக் கவிதை நூல் சொற்களஞ்சியமாக உள்ளது. வளரும் கவிஞர்கள் அனைவரும் படிக்க வேண்டிய நூலாகும். கவிக்கோ துரை வசந்தராசன் அவர்களின் அணிந்துரையும், அதிரை கவியன்பன் அவர்களின் வாழ்த்துரையும் நூலிற்கு வரவேற்பு தோரணங்களாக அமைந்துள்ளன.
மரபுக்கவிதை நெடிய கவிதைகளாக இருப்பதால் 4 வரிகள் மட்டும் மேற்கோள் காட்டி உள்ளார்.
தமிழ் வணக்கம்! – (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
கவிக்குள்ளே கமழ்கின்ற தமிழைக் கொண்டு
காவியங்கள் யாத்தவர்கள் பலரும் உண்டு
செவிக்கினிய கவிதையாலே ஆள வந்தார்
தீந்தமிழின் சொல்லெடுத்து பாக்கள் யாத்து!
தமிழ் வணக்கத்திற்கு முன்பாக அப்பா, அம்மா, ஆசான், தம்பி, தங்கை, நண்பர் பற்றிய கவிதைகள் மிக நன்று. கவிதையைப் படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் உறவுகளை நினைவில் கொண்டு வந்து வெற்றி பெறுகின்றார் நூல் ஆசிரியர்.
பேரறிஞர் அண்ணா !
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
அன்பினுக்கே அன்றைம் அண்ணல் அண்ணா
ஆற்றலுடன் ஆண்டவரே அறிஞர் அண்ணா
தன்னிறைவாய்ப் பிறந்தவரே காஞ்சி மண்ணில்
சாதித்த தமிழனன்றோ பலரும் போற்ற!
பேரறிஞர் அண்ணா அவர்கள் தந்தை பெரியாரின் கொள்கை-களுக்கு சட்ட வடிவம் தந்து நாட்டில் நடைமுறைப்படுத்தியவர். மிகப்பெரிய சமுதாய மாற்றத்தை தமிழகத்தில் கொண்டு வந்தவர். அவரைப்பற்றிய கவிதை நன்று.
பாரதி என் காதலி!
( எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
யார்யாரோ என்னினைவில் நின்று போக
யாவர்க்கு மானவனே யெனக்குக் நீயே
பார்போற்ற வந்தவனே காதல் கொண்டேன்
பைந்தமிழால் நீயெந்தன் காதல் பெண்ணே!
மகாகவி பாரதியாரை தன் காதலியாக்கி வித்தியாசமான கவிதை வடித்துள்ளார். பாராட்டுக்கள். கவிராசனை காதலியாய்ப் பார்த்த பார்வை நன்று.
புலம் பெயர்ந்தவர்களின் மனவலி என்பது சொல்லில் அடங்காது. பிறந்த மண்ணை விட்டுப் பிரிந்து வேறு நாட்டில் சொர்க்கமே என்றாலும் பிறந்த மண் போலாகாது. மனநிறைவு தராது. மனம் பிறந்த மண்ணை நினைத்துக் கொண்டே இருக்கும் இயல்பை கவிதையில் வடித்தது சிறப்பு..
இழந்துவிட்ட கணப்பொழுது!
(எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
தூர தேசம் சென்ற போது கண்ணீர் கொட்டி
தொலைந்து விட்ட மண்ணையெண்ணி
நனைந்த நேரம்
பாரமாகிப் போனமனத் தினுள்ளே சோகப்
பாத்திரமா யிருக்கிறனே யென்ன சொல்ல!
மரம் வளர்ப்பதும் அறம். மரம் வளர்ப்பது என்பது வருங்கால சந்ததிகளுக்கு வளம் சேர்ப்பது. மரம் நடும் விழா நடத்தினால் மட்டும் போதாது, தொடர்ந்து தண்ணீர் விட்டு பராமரித்து வளர்ப்பது முக்கியம். வருடா வருடம் ஒரே இடத்தில் மரம் நடும் ஏமாற்று வேலைக்கு முடிவு கட்ட வேண்டும். வேறு வேறு இடங்களில் உண்மையில் மரங்கள் நட வேண்டும். இப்படி பல சிந்தனைகளை மலர்வித்த்து ஒரு கவிதை!
மரங்களே மேகங்கள்!(எண்சீர்க்கழிநெடிலடிஆசிரிய விருத்தம்)
தந்திடுவோம் பருகிடவே! பழங்கள் யாவும்!
சாலையோரம் பூத்திடுவோம் வாசம் வீசி!
சந்ததிக்குத் தொட்டில்கள் கிளைகள் தானே!
சாய்ந்தமரம் கதவுகளும் பொருட்கள் என்றே!
மனிதகுலத்தின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு என்றால் காகிதம் தான். காகிதத்தால் தயாரான நூல்கள் தான் அன்றும் இன்றும் என்றும் சமூகத்தில் முன்னேற்றத்தை, மாற்றத்தை கொண்டு வருகின்றன. அத்தகைய உயர்ந்த காகிதங்கள் பற்றிய கவிதை.
காகிதங்கள் ! (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
கட்டாக ஒன்றுசேர்த்தே கருத்துச் சொல்லக்
கச்சிதமாய் கண்டனரே காகி தத்தை!
கட்டைகளை வெட்டியாக்கும் கூழ்மம் செய்து
கையாள நேர்த்தியாகச் செய்தார் இங்கு!
பெரும்பாலான கவிதைகள் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தத்திலும் சில கவிதைகள் நேரிசைக் கலிவெண்பா, அறுசீர்க்கலிவெண்பா, ஆசிரிய விருத்தம், வஞ்சி விருத்தம் என இலக்கணத்திற்கு எடுத்துக்காட்டாக கவிதைகள் அமைந்துள்ளன. உள்ளத்தில் பொங்கி வரும் கருத்துக்களுக்கு இலக்கண அணையிட்டு கவிதை நதியாகப் பாய்ச்கி உள்ளார், பாராட்டுக்கள்.
வள்ளுவம் வாழ்வின் நூலாம்! (வஞ்சி விருத்தம்)
கூவிளம்-மா-தேமா
கற்றவர் ஏற்றார் கனிந்து
கற்பது கடனே நமக்கு
கற்றதும் அதனில் நடக்க
ஏற்றது ஒழுக்க நூலாம்!
உலகப்பொதுமறை திருக்குறள் படிக்க மட்டுமல்ல, வாழ்வில் கடைபிடித்து நடந்தால் வையத்துள் வாழ்வாங்கு வாழலாம் என்பதை கவிதையில் உணர்த்தி உள்ளார், பாராட்டுக்கள்.
மான்விழியாள் ! (எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
வெட்கத்தால் நாணிடவே மிளிரும் கன்னம்
வேட்கையினை மூட்டிவிடும் இதழில் சாரம்
மட்டற்றுப் போவாரோ மகிழ்வில் கண்டு
மாற்றங்கள் இல்லாது மனத்தி லாட்சி!
காதலைப் பாடாத கவிஞன் இல்லை, காதலைப் பாடாதவன் கவிஞனே இல்லை. காதலால் தான் கவிதை எழுதுவதே தொடங்குகின்றது. காதல்ரசம் சொட்டச்சொட்ட காதல் மரபுக்கவிதை விருந்து வைத்துள்ளார். மரபுக் கவிதை படிப்பது என்பது மனதிற்கு சுகமானது. நீண்ட நாட்களுக்குப் பிறகு தற்கால தரமான மரபுக்கவிதை படித்த மகிழ்வு. பாராட்டுக்கள்.
—