கண்ணதாசனின் முன்னோடி கவிஞர் கா.மு.ஷெரீப்!

Estimated read time 1 min read
‘பணம் பந்தியிலே குணம் குப்பையிலே’, இதை எழுதியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம். ‘சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா?’ – இந்த வரிகளைக் கேட்கும்போது மெய் மறக்கிறோம். இயற்றியவர் யார் என்று அறியாமலேயே இன்றும் ரசிக்கிறோம்.
‘ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா? உண்மைக் காதல் மாறிப் போகுமா?’, ‘ஏரிக்கரையின் மேலே போறவளே பொன் மயிலே’ ஆகிய பாடல்கள் எந்தத் திரைப்படத்தி, யார் எழுதியது என்று ‘குவிஸ்’ நடத்தாமல் ரசிக்கிறோம்.
இதுபோன்ற திரைப்படப் பாடல் வரிகளை எழுதியவர் கவி கா.மு.ஷெரீப் என்று அறியும்போது, அவரை நாம் மறந்து விட்டோமே என்ற வேதனையும் எழுகிறது.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தாய் தந்தையர் போதிக்க, ஒழுக்கக் கல்வியைத் தவிர பள்ளிப் படிப்பில்லை. பட்டறிவு அவரைப் பல்துறை வித்தகர் ஆக்கியது .
15-ம் அகவையிலேயே அரசியலில் நுழைந்தார். பெரியாரின் சுயமரியாதை இயக்கம், தொடக்க காலத்தில் அவர் மனதைக் கவர்ந்தாலும் பிறகு தேசிய இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார்.
‘தமிழரசுக் கழகத்துடன்’ இணைந்து களம் அமைத்துத் தமிழ் முழக்கம் செய்த கவி கா.மு.ஷெரீப், தமிழரசு இயக்கக் கவிஞர்களாகத் திகழ்ந்த கு.சா.கி., கு.மா.பா.வுக்கு முன் தோன்றியவர்.
“தமிழ் முழக்கம்”, “சாட்டை” போன்ற பரபரப்பான திங்கள், திங்கள் இருமுறை, கிழமை ஏடுகள் நடத்திக் கைப்பொருள் இழந்தார்.
முஸ்லிம் சமுதாயத்தினர் தமிழ் வளர்ச்சிக்குச் செய்திருக்கும் தோந்தைப் பற்றிப் பெரிய நூலே எழுதலாம். உமறுப்புலவர், கா.பா.செய்குத் தம்பிப் பாவலர், திருவையாறு கா.அப்துல் காதர் போன்றோருக்குக்குப் பிறகு கவி கா.மு.ஷெரீப்பை நாம் கட்டாயம் பதிவு செய்தல் வேண்டும்.
கவியரசு கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலேயே பிரபலமானவர் கவி. கா.மு.ஷெரீப். “அவர் அடக்கத்தின் உறைவிடம். இன்று கவிதை எழுதும் அனைவருக்கும் மூத்தவர் ஷெரீப். நான் எழுதத் தொடங்கிய காலத்திலேயே அவருடைய கவிதைத் தொகுதி வந்துவிட்டது. “ஒளி” என்னும் தலைப்புடைய அந்தத் தொகுதியை நான் சுவைத்திருக்கிறேன்” என்று கண்ணதாசன் பாராட்டியுள்ளார்.
“கவிஞன் என்பவன் ஒரு தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளை மாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக் கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடனும் எழுத வேண்டும்” என்று சொன்னவர் கவி கா.மு.ஷெரீப். அதுபோலவே எழுதியும் வாழ்ந்தும் காட்டியவர்.
தன் பதினெட்டாம் வயதிலிருந்து கவிதை புனைந்தவர். அவரின் முதல் கவிதை “குடியரசு” ஏட்டில் 1934-ம் ஆண்டு வெளிவந்தது.
1939-ம் ஆண்டில் “சந்திரோதயம்” என்னும் ஏட்டில் தம் இருபத்தைந்தாவது அகவையிலே தமிழின் தொன்மையைப் பாடியவர். ‘அன்னையா? கன்னியா?’ என்ற கவிதையில் புதிய கருத்து ஒன்றைத் துணிவுடன் 1956-ல் ‘சாட்டை’ இதழில் எழுதினார்.
தமிழில் பிறமொழிச் சொற்கள் என்ற அருமையான கட்டுரையை தாய்நாடு பத்திரிகையில் எழுதினார்.
தமிழ்நாடு மலர திருத்தணியை சென்னையை மீட்ட ம.பொ.சியின் இயக்கத்தில் இணைந்தவர் ஷெரீப். சீறாப்புராணத்தின் எட்டு பாகங்களுக்கும் உரை எழுதி அறிஞர்களால் புகழப் பெற்றார்.
1948-ல் அறிஞர் அண்ணாவின் ‘சந்திரமோகன்’ நாடகத்தில் ‘திருநாடே’ என்று அவர் எழுதிய பாடலை அன்று முணுமுணுக்காதவர்களே கிடையாது. முதலில் நாடகங்களுக்குப் பாடல் எழுதி அதன் பின்னர் கொலம்பியா கம்பெனி ரிக்கார்டுகளுக்காக வசனமும் பாடலும் எழுதி திரை உலகுக்கு மெல்ல எட்டிப் பார்த்தவர். ஆனால் அதையே முழுமையாக நம்பவில்லை.
கவிஞர் கா.மு.ஷெரீப். ‘சிவ லீலா’ என்னும் திரைப்படத்துக்கு எழுதிய பாடல்களைத்தான் திருவிளையாடல், திருவருட்செல்வர் ஆகிய படங்களுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும், ‘பாட்டும் நானே பாவமும் நானே’ என்ற பாடல் இவருடைய பாடல் என்பது திரை உலகில் அன்றே பரபரப்பாகப் பேசப்பட்டது.
தன் சொந்த முயற்சியால் தமிழ் கற்றுச் சுயம்புக் கவிஞரான ‘காதர்ஷா முகம்மது ஷெரீப்’ என்ற பெயரை கா.மு.ஷெரீப் என்று சுருக்கிக் கொண்டார். இவரைப் பற்றி இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். இடமும் நேரமும் போதாது.
– கலைமாமணி விக்ரமன், தினமணியில் எழுதிய கட்டுரையிலிருந்து .
Please follow and like us:

You May Also Like

More From Author