இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், தமிழ் திரையுலகம் தற்போது சந்தித்து வரும் இக்கட்டான சூழல் குறித்து மிக ஆழமான மற்றும் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். குறிப்பாக, விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்திற்கு ஏற்பட்டுள்ள சிக்கலை முன்வைத்து, ஒட்டுமொத்த சினிமாவையும் காப்பாற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
விஜய் நடிப்பில் நாளை வெளியாக வேண்டிய ‘ஜன நாயகன்’ திரைப்படம், தணிக்கை வாரியத்தின் கெடுபிடிகளால் ரிலீஸ் தள்ளிப்போயிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத உணர்வுகள் தொடர்பான காட்சிகளை நீக்க வேண்டும் என சென்சார் வாரியம் பிடிவாதம் பிடிப்பதால், கடைசி நேரத்தில் படத்தின் வெளியீடு நிறுத்தப்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க, ‘பராசக்தி’ போன்ற பெரிய படங்களுக்கும், ‘சல்லியர்கள்’ போன்ற சிறிய படங்களுக்கும் திரையரங்குகள் கிடைப்பதிலும், சான்றிதழ் பெறுவதிலும் பெரும் போராட்டமே நடப்பதாக கார்த்திக் சுப்புராஜ் வேதனை தெரிவித்துள்ளார்.
தணிக்கை வாரியத்தின் தற்போதைய விதிமுறைகள் ஒரு படைப்பாளிக்கு பெரும் சுமையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “வெளியீட்டு தேதிக்கு 3 மாதங்களுக்கு முன்பே படம் தயாராக இருக்க வேண்டும் என்பது நடைமுறையில் சாத்தியமற்றது” என்று கூறிய அவர், இந்த விதிகளை எளிமைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். ரசிகர் சண்டைகளையும், அரசியல் காழ்ப்புணர்ச்சிகளையும் ஓரம் தள்ளிவிட்டு, சினிமாவை மீட்டெடுக்க அனைவரும் ஒரு குடையின் கீழ் வர வேண்டும் என்பதே அவரது வேண்டுகோளாக உள்ளது.
