தூத்துக்குடியில் நேற்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மேற்கொண்ட ரோடு ஷோ, அப்பகுதியையே ஸ்தம்பிக்க வைத்த நிலையில், தற்போது அவர் மீது காவல்துறையினர் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். அனுமதியின்றி இருசக்கர வாகனத்தில் ஊர்வலமாகச் சென்றது, அனுமதிக்கப்படாத இடங்களில் கட்சி கொடிகளைப் பயன்படுத்தியது என மொத்தம் 12 விதிகளை மீறியதாக விஜய் மற்றும் த.வெ.க நிர்வாகிகள் மீது தூத்துக்குடி போலீசார் வழக்குகளைக் குவித்துள்ளனர்.
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய்யின் இந்தப் பயணமும், அதைத் தொடர்ந்து எடுக்கப்பட்டுள்ள சட்ட நடவடிக்கைகளும் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் ரோடு ஷோவில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் மீறப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. குறிப்பாக, த.வெ.க தலைவர் இருசக்கர வாகனத்தில் சென்றது மற்றும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறிச் செயல்பட்டது ஆகிய காரணங்களை முன்வைத்து 12 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விஜய்க்குப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், கூட்டத்தை ஒழுங்குபடுத்த வேண்டும் என்றும் மற்ற அரசியல் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வரும் வேளையில், இந்த வழக்குகள் விஜய் மீதான அரசியல் நெருக்கடியாகவே பார்க்கப்படுகிறது.
