சீனாவின் ஷாங்காய் நகரில் உள்ள பாகுஷன் குடியிருப்பில், உயிரிழந்த தனது எஜமானரின் வருகைக்காக வாரக்கணக்கில் காத்திருக்கும் ‘அ வாங்’ என்ற செல்லப் பிராணியின் செயல் பலரது கண்களைக் குளமாக்கியுள்ளது.
கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி, சுமார் பத்து ஆண்டுகளாக அந்த நாயைப் பராமரித்து வந்த காவோ என்பவர் திடீர் உடல்நலக்குறைவால் காலமானார்.
தனது எஜமானர் இறந்தது தெரியாமல், அவர் வசித்த வீட்டின் வாசலிலேயே பசியோடும் தாகத்தோடும் பல வாரங்களாக அந்த நாய் காத்திருந்தது.
அக்கம் பக்கத்தினர் உணவும் நீரும் வழங்க முன்வந்தபோதும், அவற்றைப் பெற்றுக்கொள்ள மறுத்த அந்த நாய், எந்நேரமும் வாசலையே ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.
கடந்த 2009-ஆம் ஆண்டு வெளியான ‘ஹாச்சி’ திரைப்படத்தில் வரும் நாயைப் போலவே, எஜமானரின் மரணத்திற்குப் பிறகும் மாறாத அன்பைச் செலுத்தும் இந்த நாயின் விசுவாசத்தைப் பார்த்த மக்கள் அதனைச் ‘சீனாவின் ஹாச்சிகோ’ எனப் போற்றி வருகின்றனர்.
கடந்த ஜனவரி 6-ஆம் தேதி கடும் மழை மற்றும் குளிருக்கு இடையே அந்த நாய் திடீரென மாயமானதால் அப்பகுதி மக்கள் பெரும் கவலையடைந்தனர். இதையடுத்து உள்ளூர் காவல் துறையினர் மற்றும் தன்னார்வலர்கள் மேற்கொண்ட தேடுதல் வேட்டையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு அருகிலுள்ள புதர்களுக்குள் நடுங்கியபடி மறைந்திருந்த அந்த நாய் பத்திரமாக மீட்கப்பட்டது.
அப்போது அந்த நாயின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்ததைக் கண்ட மீட்புக் குழுவினர் மிகுந்த மனவேதனை அடைந்தனர். தற்போது அந்த நாய் குடியிருப்புக் குழுவின் அலுவலகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.
காவோவின் மகன் அந்த நாயைப் பொறுப்பேற்க முன்வராத நிலையில், அதன் விசுவாசத்தைக் கண்டு நெகிழ்ந்த அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் அதனைத் தத்தெடுக்க முன்வந்துள்ளார்.
எஜமானருக்காக உயிரையே விடத் துணியும் விலங்குகளின் உன்னதமான அன்பிற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.
