ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு எதிராக அமெரிக்கா ஏதேனும் தாக்குதல்களை முன்னெடுத்தால், அது ஈரானுக்கு எதிரான முழுமையான போராகக் கருதப்படும் என்று ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஈரானில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு அமெரிக்காவின் மனிதாபிமானமற்ற பொருளாதாரத் தடைகளே முக்கிய காரணம் என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடப் போவதாகத் தெரிவித்த கருத்துக்குப் பதிலடியாக, ஈரானின் இறையாண்மைக்கு எதிராகச் செயல்படும் எந்தவொரு அநீதியான ஆக்கிரமிப்புக்கும் கடுமையான மற்றும் வருந்தத்தக்க வகையில் பதிலடி கொடுக்கப்படும் என அதிபர் பெஷேஷ்கியன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ஈரானில் சமீபகாலமாக நடைபெற்று வரும் போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டால் அமெரிக்கா தலையிட வாய்ப்புள்ளதாக டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் தொடர்புடைய பயங்கரவாதிகளே இந்த மரணங்களுக்குக் காரணம் என்று ஈரான் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒரு “குற்றவாளி” என்று வர்ணித்துள்ள ஈரான் தலைமை, தங்கள் நாட்டின் உயர்ந்த அதிகார மையமான உச்ச தலைவரை குறிவைப்பது என்பது ஈரான் தேசத்தின் மீதான நேரடிப் போர் பிரகடனம் என்று எச்சரித்துள்ளது. இந்த விவகாரம் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
