நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே சித்தூர் தென்கரை மகராஜேஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சாஸ்தா கோயில்களில் தேரோட்டம் நடப்பது இங்கு மட்டும்தான் என்பது விசேஷமானாகும். தமிழகம் மட்டுமின்றி கேரளாவில் இருந்து ஏராளமான பங்கேற்பு.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே நம்பியாற்றின் தென்கரையில் சித்தூர் என்ற கிராமம் உள்ளது, இவ்வூரில் சாந்தமே உருவாக சத்தியமே வடிவமாக கொண்டு தென்கரை மகாராஜேஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாளித்து வருகிறார். சாஸ்தா கோயில்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோயிலாகும்.
தென்மாவட்டங்களில் குடும்ப கோயில் வழிபாட்டில் முக்கிய பங்கு வகிப்பது இக்கோயிலாகும். இக்கோயிலில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் பங்குனி மாதம் நடக்கும் உத்திர திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். பெயருக்கு ஏற்றார்போல் சித்தூர் சிறிய ஊராக இருந்தாலும் பங்குனி உத்திர திருவிழா நாளில் பக்தர்கள் கூட்டத்தினால் சித்தூர் கிராமமே களைகட்டி காணப்படும். ஆண்டுதோறும் நடக்கும் பங்குனி உத்திர திருவிழா இந்த ஆண்டு கடந்த 3ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 11 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினமும் காலையில் சுவாமிக்கு அபிஷேக பூஜையும் மதியம் கும்பாபிஷேக தீபாராதனை பூஜையும் இரவில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
9ம் திருவிழாவான இன்று காலை 10.30 மணிக்கு தென்கரை மகாராஜேஸ்வர சுவாமி தேரில் எழுந்தருளினார். பின்பு பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. சாஸ்தா கோயில்களில் பக்தர்கள் ஒன்று கூடி தேரை வடம் பிடித்து தேரோட்டம் நடப்பது நெல்லை மாவட்டம் சித்தூர் தென்கரை மகாராஜேஸ்வரர் கோயில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியை காண தமிழக மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.